காஸா: உதவிப் பொருள்கள் செல்லவிடாமல் தடுப்போர் மீது நடவடிக்கை

காஸா: உதவிப் பொருள்கள் செல்லவிடாமல் தடுப்போர் மீது நடவடிக்கை

1 mins read
2cf4ee84-692b-4289-b2cf-41f2a5be1bfc
காஸா மக்களுக்கு உதவும் முயற்சிகளை தடை செய்யும் இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்களை முறியடிக்க, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜெருசலம்: அத்தியாவசிய பொருள்களான மாவு, உணவு, சுகாதாரப் பொருள்கள், கூடாரங்கள், பிற பொருள்கள் அடங்கிய வாகனங்களை இரண்டு நாட்களுக்கு காஸாவுக்குள் நுழையவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜனவரி 26ஆம் தேதி கூறியது.

காஸா மக்களுக்கு உதவும் முயற்சிகளை தடை செய்யும் இந்த இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்களை முறியடிக்க, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

அப்பகுதிக்குள் கூடுதல் உதவிப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நீதிமன்றம் கூறிய பிறகு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காஸாவுக்குள் நுழையும் எல்லையை சுற்றியுள்ள பகுதிகள், ராணுவ வீரர்கள் மட்டுமே செல்லக்கூடிய இடம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன், ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளை எதிர்த்து, காவலர்கள் வைத்த வீதித் தடைகளைத் தவிர்ப்பதற்குத் திறந்த வெளிகள் வழியாக பயணித்த காட்சிகள் சமூகத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தெற்கு இஸ்ரேலில் உள்ள கெரெம் ஷாலோம் எல்லையைக் கடந்து செல்ல புதன்கிழமையிலிருந்து (ஜனவரி 24) தடுத்து வரும் எதிர்ப்பாளர்கள், காஸாவில் உள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் வரை மனிதாபிமான உதவி எதுவும் காஸாவுக்குள் செல்லக்கூடாது என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் வாதமாகும்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்உதவிதடை