‘ஒற்றுமை தைப்பூசம்’: பினாங்கில் தங்க, வெள்ளி ரதங்கள் ஊர்வலம்

2 mins read
f89c50f3-f8a2-4c96-9488-23554be76a3f
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தங்க, வெள்ளி ரத ஊர்வலம் களைகட்டியது. - படம்: மலேசிய ஊடகம்

ஜார்ஜ்டவுன்: தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தங்க, வெள்ளி ரதங்கள் ஊர்வலமாகச் செல்கின்றன.

தங்க ரதத்தில் முருகப் பெருமானின் வேல் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த ரதம் ஜனவரி 24ஆம் தேதி அதிகாலை 5.20 மணி அளவில் குவீன்ஸ் ஸ்திரீட்டில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

தங்க ரத ஊர்வலம் ஜாலான் கெபுன் புங்காவில் உள்ள தண்ணீர் மலை முருகன் கோயிலில் ஜனவரி 24ஆம் தேதி இரவு நிறைவடையும்.

முருகப் பெருமானின் விக்ரகத்தை ஏற்றிச் செல்லும் வெள்ளி ரதம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து (அதிகாலை 6.40 மணி) பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

தங்க ரதம் செல்லும் அதே பாதையில் அதற்குப் பின்னால் வெள்ளி ரதம் செல்கிறது.

வெள்ளி ரத ஊர்வலம் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலில் நிறைவடையும்.

இதற்கிடையே, இரு ரதங்களின் ஊர்வலத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

ரதங்களுடன் அவர்களும் பாத யாத்திரையாக கோயிலை நோக்கிச் செல்கின்றனர்.

மேள தாளம் முழங்க, “வெற்றி வேல் முருகா” என பக்தர்கள் முழக்கமிட, பினாங்கில் தைப்பூசத் திருவிழா களைகட்டியுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கு முன்பு வெள்ளி ரதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளாக வெள்ளி ரதமும் தங்க ரதமும் ஒரே பாதையில் ஊர்வலம் செல்வதால் பினாங்கு மாநிலத்தில் இவ்வாண்டு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவுக்கு ‘ஒற்றுமை தைப்பூசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்