ஹுதி படைமீது தாக்குதல்: கொந்தளிப்பைத் தணிக்க ஐநா வேண்டுகோள்

ஹுதி படைமீது தாக்குதல்: கொந்தளிப்பைத் தணிக்க ஐநா வேண்டுகோள்

1 mins read
d568abb6-8360-4a8a-b60b-3ffb8f72eb13
ஹுதி படையினர் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து ஏமனின் சானா நகரில் திரண்ட அப்படையின் ஆதரவாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

நியூயார்க்: செங்கடல் வட்டாரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையை இன்னும் சூடாக்க வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ் எல்லாத் தரப்புகளையும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதனை அவரது பேச்சாளர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தெரிவித்தார். ஏமனின் ஹுதி கிளர்ச்சிப் படையினர் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலைத் தொடங்கியதும் அவரது வேண்டுகோள் வெளிவந்துள்ளது.

ஹுதி படையினருக்கு எதிராக வெள்ளிக்கிழமை விடியற்காலை சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.

செங்கடலில் சென்ற கப்பல்கள் மீது கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி அவற்றைச் சீர்குலைக்கும் சம்பவங்கள கடந்த சில வாரங்களாக தொடர்ந்ததன் விளைவாக வாஷிங்டன், லண்டன் இணைந்து ஹுதி படையினருக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கின.

மத்திய கிழக்கின் காஸாவில் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தத் தாங்கள் முயன்று வருவதாக ஹுதி படையினர் தெரிவித்து வருகின்றனர்.

காஸா சண்டைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கப்பல்களை அவர்கள் சீர்குலைத்ததாகவும் அதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் அந்த வட்டாரம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஊடகங்கள் கூறின.

இந்நிலையில், “செங்கடலிலும் அதனைச் சூழ்ந்த விரிவான வட்டாரத்திலும் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கொந்தளிப்பான சூழ்நிலையை இன்னும் அதிகமாக்க வேண்டாம் என்று ஐநா தலைமைச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்,” என்று திரு குட்டரஸின் பேச்சாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்