பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர் உதவி: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர் உதவி: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

2 mins read
b4c02061-62a5-4900-9f2a-f39ffc9eefa8
புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகளை கடும் பனிப்பொழிவு பாதித்துள்ள நிலையில், தேடி மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வஜிமா, ஜப்பான்: புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவுக்கு உள்ளான பகுதிகளுக்கு “தொடர்ச்சியான” ஆதரவை வழங்குவதாக ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவு மீட்பு, நிவாரணப் பணிகளைச் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்து ஆறு நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இச்சம்பவத்தில் குறைந்தது 126 பேர் உயிர் இழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

நோட்டோ தீபகற்பத்தின் மோசமான பருவநிலை, 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்களை இன்னமும் பாதித்து வருகிறது.

அந்தப் பேரிடரில் 30,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளும் வணிகங்களும் மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகளின்றி சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றன.

குறைந்தது 222 பேரை இன்னும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 560 பேர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவிலும் இஷிகாவா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உதவுவதும் முக்கிய முன்னுரிமையுடன் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளாகும்,” என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

“நிதி நெருக்கடி காரணமாக பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவத் தயங்கக்கூடாது,” என்று அவர் சொன்னார்.

திரு கிஷிடா ஜனவரி 5ஆம் தேதி தனது அரசாங்கம் மறுசீரமைப்பு முயற்சிகளுக்காக வரவுசெலவுத் திட்டத்தின் கீழ்வரும் சேமிப்பிலிருந்து 4.74 பில்லியன் யென் (43.6 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பயன்படுத்தும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்