9,652 சிறைக் கைதிகளை விடுவிக்கும் மியன்மார்

9,652 சிறைக் கைதிகளை விடுவிக்கும் மியன்மார்

1 mins read
88503d6d-625d-4dba-a511-7e77b04881e8
யங்கூனில் விடுவிக்கப்படவுள்ள சிறைக் கைதிகளுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

நேப்பிடோ: மியன்மாரின் ராணுவ அரசாங்கம், 114 வெளிநாட்டவர் உட்பட 9,652 சிறைக் கைதிகளை விடுவிக்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் சுதந்திர தினத்தை அனுசரிக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வியாழக்கிழமையன்று குறிப்பிட்டது.

“மற்ற நாடுகளுடனான நல்லுறவைத் தக்கவைத்துக்கொள்ளவும் மனிதாபிமான காரணங்களுக்காகவும் வெளிநாடுகளைச் சேர்ந்த 114 கைதிகளுக்கு அதிகாரபூர்வ மன்னிப்பு வழங்கப்படும்,” என்று மியன்மாரின் ராணுவ அரசாங்கம் அதற்குச் சொந்தமான ஊடகத்தில் தெரிவித்தது. “அவர்கள் நாடு கடத்தப்படுவர்,” என்றும் அது குறிப்பிட்டது.

மியன்மாரின் வர்த்தகத் தலைநகரான யங்கூனில் உள்ள இன்செய்ன் சிறைக்கு வெளியே விடுவிக்கப்படும் கைதிகளை வரவேற்கப் பலர் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சிறையில் இருப்பவர்களில் நோபல் பரிசை வென்ற திருவாட்டி ஆங் சான் சூச்சியும் ஒருவர். திருவாட்டி சூச்சிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவருக்கு மொத்தம் 27 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்து வருகிறார்.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனையடுத்து தென்கிழக்காசிய நாடான அதில் குழப்பநிலை தொடர்கிறது.

அதற்கு முன்பு சுமார் 10 ஆண்டுகளுக்கு மியன்மாரில் ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கட்டாயமாக முடக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்