ர‌ஷ்ய நகர் மீது உக்ரேன் தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு

ர‌ஷ்ய நகர் மீது உக்ரேன் தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு

2 mins read
d7933597-854d-420d-a068-9a3015261313
பெல்கோராட் நகர் மீது உக்ரேன் நடத்திய தாக்குதலில் 30 அடுக்குமாடி கட்டடங்களும் சில வீடுகளும் கார்களும் சேதமடைந்ததாக ர‌ஷ்ய அதிகாரிகள் கூறினர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மாஸ்கோ: ர‌ஷ்யாவின் பெல்கோராட் நகர் மீது உக்ரேன் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் 22 பேர் மாண்டுவிட்டனர் என்றும் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

வான்வழித் தாக்குதலை சனிக்கிழமை இரவு உக்ரேன் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 109 பேர் காயமடைந்ததாக ர‌ஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 30 அடுக்குமாடி கட்டடங்களும் சில வீடுகளும் கார்களும் சேதமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.

பொதுமக்கள் வாழும் இடத்தைக் குறிவைத்து தாக்கியதற்காக உக்ரேனை ரஷ்யா கடுமையாகச் சாடியுள்ளது.

உக்ரேனின் வடக்கு எல்லையில் உள்ளது பெல்கோராட் நகரம். இரு நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து பெல்கோராட் நகரில் அடிக்கடி வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே ர‌ஷ்யா, உக்ரேனின் கார்கிவ் நகர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் 22 பேர் காயமடைந்தனர்; சில குடியிருப்புக் கட்டடங்கள் சேதமாகின.

இந்நிலையில், ர‌ஷ்ய நீதிமன்றங்கள் 200க்கும் அதிகமான உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளதாக ர‌ஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

போரின்போது குற்றம் செய்ததற்காக உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு நீண்ட நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ர‌ஷ்யா 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்கேரன் மீது போர் தொடுத்தது. அதன் பின்னர் இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்திவருகின்றன.

உக்ரேனில் மட்டும் 10,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ர‌ஷ்யாவில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது பற்றி சரியான விவரங்கள் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்
போர்ர‌ஷ்யாஉக்ரேன்