இன்ப அதிர்ச்சி தர நினைத்தவருக்கு காத்திருந்தது துன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி தர நினைத்தவருக்கு காத்திருந்தது துன்ப அதிர்ச்சி

2 mins read
f4cd4885-b78a-4322-97a5-9e916e53c4d8
வீட்டுச் சாவிக்குப் பதில் கடிதங்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு தம்பதிக்கு ஏமாற்றம். - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

தமது மனைவியை ஜோகூருக்கு அழைத்துச் சென்று தேன்நிலவில் இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு துன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஜோகூர் பாருவின் லெகோலாண்ட் என்னும் இடத்தின் அருகே உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றை ஓர் இரவுக்கு வாடகைக்கு எடுத்திருந்த ஆடவர் ஏமாற்றத்தைச் சந்தித்தார்.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்தினம் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை Iceboxxxx1 என்னும் பெயரில் டிக்டாக் சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஓர் இரவுக்கு 200 ரிங்கிட் (S$57) செலுத்தி ‘அகோடா’ சுற்றுப்பயண வர்த்தகத் தளத்தில் முன்பதிவு செய்திருந்ததாகவும் டிசம்பர் 24ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்பை அடைந்தபோது வீட்டுக்கான சாவி கடிதப்பெட்டியில் எடுக்க பாதுகாவலர் ஒருவர் துணைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடிதப் பெட்டியைத் திறந்தபோது ஏமாற்றமே மிஞ்சியதாகவும் சாவிக்குப் பதில் சில கடிதங்கள் மட்டுமே அங்கு இருந்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தாம் முன்பதிவு செய்திருந்த வீடு புலன்விசாரணையின்கீழ் இருப்பதை அப்போது தாம் தெரிந்துகொண்டதாகவும் அப்படிப்பட்ட ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க அந்த இணையத்தளம் எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் தமது டிக்டாக் பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார்.

“200 ரிங்கிட் போனதில் பெரிய வருத்தம் இல்லை. ஆனால், என்னுடைய வாழ்க்கைத் துணைக்கு நினைவில் நிலைத்திருக்கக்கூடிய, இன்பமான தருணத்தை இழந்ததுதான் பெரிய வருத்தம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி அன்றிரவு தங்குவதற்கு தாங்கள் இருவரும் வேறு இடத்தைத் தேடி அலைந்ததாகவும் அந்த ஆடவர் குறிப்பிட்டுள்ளதாக ‘ஏஷியா ஒன்’ இணையச்செய்தி கூறியது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாரு