மலேசிய முன்னாள் அமைச்சர் ஸைனுதீனின் கட்டடம் பறிமுதல்

மலேசிய முன்னாள் அமைச்சர் ஸைனுதீனின் கட்டடம் பறிமுதல்

2 mins read
4eb69a96-1081-4e4c-b2c3-5bbfb8e04231
மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டைய்ம் ஸைனுதீன். - கோப்புப் படம்: எஸ்பிஎச்
multi-img1 of 2
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சரான டைய்ம் ஸைனுதீன் குடும்பத்துக்குச் சொந்தமான 60 தள அலுவலகக் கட்டடத்தை அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு (எம்ஏசிசி) பறிமுதல் செய்தது.

எனினும், தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் அக்கட்டடம் வெள்ளிக்கிழமையன்று வழக்கத்தைப் போல் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெனாரா இல்ஹம் என்ற அக்கட்டடத்தில் இயங்கும் நிறுவனங்களில் வேலை செய்வோரும் பொதுமக்களும் எப்போதும்போல அங்குச் சென்று வந்தனர்.

கட்டடம் பறிக்கப்பட்டதன் தொடர்பில் அதன் நிர்வாகக் குழு தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக மெனாரா இல்ஹம் கட்டடத்தில் வேலை செய்யும் ஒருவர் ‘தி ஸ்டார்’ ஊடகத்திடம் கூறினார். எனினும், செயல்பாடுகள் தொடரும் என்று தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் வெள்ளிக்கிழமையன்று நிலைமை என்றையும் போல் இருந்ததைச் சுட்டினார்.

கட்டடம் பறிக்கப்படும் என்று வியாழக்கிழமையன்று கேள்விப்பட்டதும் முதலில் தனக்கு அச்சம் ஏற்பட்டதாக அங்கு வேலை செய்யும் மற்றொருவர் கூறினார்.

580 மில்லியன் டாலர் (769 மில்லியன் வெள்ளி) செலவில் கட்டப்பட்ட மெனாரா இல்ஹம், கேஎல்சிசி எனும் கோலாலம்பூரின் முக்கிய வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ளது.

2018ஆம் ஆண்டு மலேசியாவில் ஆட்சியில் இருந்த பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் சிஇபி என்றழைக்கப்படும் முக்கியப் புள்ளிகள் குழுவை திரு டைய்ம் தலைமையில் தொடங்கியது. மெனாரா இட்ஹத்தில்தான் அக்குழுவினர் சந்திப்புகளை நடத்தினர்.

எம்ஏசிசி சட்டம் 2009க்குக்கீழ் குற்றம் இடம்பெற்றதை அறிந்தவுடன் அக்கட்டடத்தைப் பறித்ததாக எம்ஏசிசி தெரிவித்தது. இத்தகவலைக் கொண்ட எம்ஏசிசியின் அறிவிப்பை திங்கட்கிழமையன்று உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.

தன்னிடமும் தனது குடும்பாத்தாரிடமும் உள்ள நிதி குறித்த தகவல்களைத் தங்களிடம் தெரியப்படுத்துமாறு எம்ஏசிசி திரு டைய்முக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. அதை அவர் நிராகரித்ததைத் தொடர்ந்து கட்டடத்தைப் பறிக்க எம்ஏசிசி முடிவெடுத்ததாக திரு டைய்முக்கு நெருக்கமான நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று சிஎன்ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

முன்னாள் அமைச்சரும் வர்த்தகருமான ஒருவர் 2.3 பில்லியன் ரிங்கிட் (657 மில்லியன் வெள்ளி) தொகையைக் கையாண்டதாகச் சந்தேகிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் தகவல்களைத் தான் சேகரித்து வந்ததாகவும் எம்ஏசிசி கடந்த மே மாதம் கூறியது.

‘பெண்டோரா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவுடன் இந்த விவகாரம் தொடர்புடையது என சில தகவல்கள் தெரிவித்துள்ளன.

2021ஆம் ஆண்டில் ‘பெண்டோரா பேப்பர்ஸ்’ என்றழைக்கப்படும் பல ஆவணங்கள் கசிந்தன. பல்வேறு உலகத் தலைவர்கள், செல்வந்தர்கள், பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் நிதிக் கணக்குகள் குறித்த விவரங்கள் அந்த ஆவணங்களில் இடம்பெற்றன.

திரு டைய்ம், மலேசியாவின் நிதி அமைச்சராக இரு முறை பதவி வகித்துள்ளார். அவர் முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்றும் நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஊழல்