காஸாவுக்கு மனிதாபிமான உதவி: ஐநா வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

காஸாவுக்கு மனிதாபிமான உதவி: ஐநா வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

1 mins read
78d45fa4-4488-4ff2-9836-160b48ea0bfd
காஸாமீது தாக்குதல்களைத் தொடரும் இஸ்ரேல். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

காஸா: காஸாவுக்குக் கூடுதல் மனிதாபிமான உதவி வழங்குவது குறித்து ஐக்கிய நாட்டுச் சபை பாதுகாப்பு மன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 22ஆம் தேதிவரை (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதோடு, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடரும் போரைத் தற்காலிகமாக நிறுத்த இரு தரப்பையும் ஒப்புக்கொள்ளவைக்க எகிப்தில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக போரைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயன்படுத்தக்கூடிய எல்லா பாதைகளின் வழியாகவும் மனிதாபிமான உதவியை அனுப்புவதற்கு வகைசெய்ய இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் குரல் கொடுக்க மாற்றங்கள் செய்யப்பட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அதற்கு ஆதரவளிக்கத் தயாராய் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தபோதும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நிலைமைக்குத் தீர்வுகாண அரசதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், காஸா பகுதியில் போர் தீவிரமடைந்துள்ளது.

காஸாவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன; அதேவேளை, இஸ்ரேலின் வர்த்தகத் தலைநகரான டெல் அவிவ்மீது ஹமாஸ் அமைப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சி வருவதாகவும் வியாழக்கிழமையன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்