இந்தோனீசியாவில் குமுறும் எரிமலை; 11 மலையேறிகள் சடலங்களாக மீட்பு

இந்தோனீசியாவில் குமுறும் எரிமலை; 11 மலையேறிகள் சடலங்களாக மீட்பு

2 mins read
76dbe132-7f1d-4bb0-9ded-7e2c2eb94659
மராபி எரிமலை வெடித்துச்சிதறியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: மேற்கு சுமத்ராவில் உள்ள மராபி எரிமலை வெடித்துச் சிதறியதில் 11 மலையேறிகளை இந்தோனீசிய மீட்பாளர்கள் சடலங்களாக மீட்டுள்ளனர்.

எரிமலையில் மூன்று பேர் உயிரோடு மீட்கப்பட்டதாகவும் குறைந்தது 12 பேர் காணவில்லை என்றும் மீட்புக் குழு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 22ஆக இருக்கும் என்று மற்றொரு அதிகாரி ஒருவர் மதிப்பிட்டுள்ளார்.

சுமத்ரா தீவில் 2,891 மீட்டர் உயரமுள்ள மராபி மலை ஞாயிற்றுக் கிழமை வெடித்துச் சிதற ஆரம்பித்தது. நெருப்புக் குழம்புகள் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வழிந்தோடியது.

எரிமலை தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் மீட்பு முகவையின் பேச்சாளர் ஜோடி ஹரியவான் கூறினார்.

ஆனால் ஆபத்துகளையும் மீறி மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை காலை வரை 49 மலையேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார் அவர்.

“ஏறக்குறைய 26 பேர் இன்னமும் மலையிலிருந்து மீட்கப்படாமல் இருக்கின்றனர். அவர்களில் 14 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். மூவர் உயிரோடும் 11 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்,” என்று பாடாங்கின் தேடி மீட்பு முகவையின் தலைவர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

சனிக்கிழமையிலிருந்து 75 மலையேறிகள் மலை மீது இருந்ததாக அவர் கூறினார்.

“ஒரு பள்ளத்திலிருந்து மூன்று பேரும் மீட்கப்பட்டனர். அவர்களது நிலைமை மோசமாக இருந்தது. சிலருக்கு கடுமையான தீக்காயம் இருந்தது,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில் மீட்புக் குழுவினர் மாறி, மாறி சடலங்களை மலையிலிருந்து இறக்கி வருகின்றனர். எரிமலை தொடர்ந்து சீறிக் கொண்டிருப்பதால் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியவில்லை என்று திரு மாலிக் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட மலையேறிகளில் ஒருவரான ஷாஃபிரா ஸாஹ்ரிம் ஃபெப்ரினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பதினெட்டு பள்ளி நண்பர்களுடன் அவர் மலையேறியபோது சிக்கிக் கொண்டார்.

தனது மகள் கடுமையான மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது தாயார் ராடெலானி, 39, தெரிவித்தார்.

“இரவு முழுவதும் தீக்காயத்தைப் பார்த்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார்,” என்று அவர் கூறினார்.

எரிமலை வெடித்த பிறகு இரண்டு மலையேறும் பாதைகள் மூடப்பட்டன. மராபி அடிவாரத்தில் குடியிருக்கும் மக்கள் குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்