காஸாவில் மேலும் மூன்று செய்தியாளர்கள் பலி

காஸாவில் மேலும் மூன்று செய்தியாளர்கள் பலி

2 mins read
e5b5a6a9-fab5-42e6-acf5-00c49773fbb0
நவம்பர் 19ஆம் தேதி செய்தியாளர்களான ஹஸ்ஸாவுனா ஸ்லீம், சேரி மன்சூர் ஆகிய இருவரும் காஸாவின் மத்திய வட்டாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அருகே உள்ள வீடுமீது இஸ்ரேல் தாக்கியதால் உயிரிழந்தததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காஸா: காஸாவை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கிவரும் நிலையில் மேலும் மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவ்வட்டாரத்தின் முக்கிய ஊடகத்தின் தலைவரும் இரண்டு செய்தியாளர்களும் உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

வார இறுதியில் இறந்தவர்களுடன் சேர்த்து மொத்தம் 48 செய்தியாளர்களும் ஊடகத்தினரும் கொல்லப்பட்டதாக நியூயார்க்கைத் தளமாகக் கொண்டு செயல்படும் பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்மீது ஹமாஸ் எதிர்பாராத தாக்குதலை நடத்தியதால் காஸா வட்டாரத்தை இஸ்ரேல் சூறையாடி வருகிறது.

இஸ்ரேல், காஸா ஆகிய இரு தரப்பிலும் செய்தியாளர்கள் கொல்லப்பட்டாலும் காஸாவில் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று அந்தக் குழு தெரிவித்தது.

ஒவ்வொரு செய்தியாளர் கொல்லப்பட்டதையும் குறைந்தது இரண்டு ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என்றது அக்குழு.

இறந்தவர்களில் 43 பாலஸ்தீனர்கள், நான்கு இஸ்ரேலியர்கள், ஒருவர் லெபானானியர்.

“வட்டாரம் முழுவதும் இதயத்தை நொறுங்கச் செய்யும் போர் பற்றிய செய்தியைத் திரட்டுவதற்காக செய்தியாளர்கள் தியாகம் செய்து வருகின்றனர். குறிப்பாக காஸாவில் அவர்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்,” என்று மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க திட்ட ஒருங்கிணைப்பாளரான ஷெரிஃப் மன்சூர் ராய்ட்டர்சுக்கு எழுதிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று அரசாங்க சார்பற்ற அமைப்பான பாலஸ்தீன பத்திரிகையாளர் அமைப்பின் தலைவரும் செய்தியாளருமான பெலால் ஜாடல்லா உயிரிழந்தார். அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் உறவினர்களும் காயம் அடைந்தனர் என்று ராய்ட்டர்ஸ் கூறியது.

காஸா சிட்டியின் தெற்குப் பகுதிக்குச் செல்வதாக ஞாயிற்றுக்கிழமை முன்னதாக தம் சகோதரியிடம் பெலால் கூறியிருந்தார்.

பின்னர் காஸா சிட்டியில் உள்ள ஜெய்டுன் பகுதியில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரைக் கண்டுபிடித்தவர்கள் மருத்துவ நிலையத்தில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இஸ்ரேலின் குண்டு மழையில் அவர் இறந்ததாக அவருடைய சகோதரி குறிப்பிட்டார்.

பெலாலின் நான்கு உறவினர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக காஸாவிலும் இதர நாடுகளிலும் பணிபுரிகின்றனர். செய்தியாளர் பாதுகாப்புக் குழு வெளியிட்ட, இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராய்ட்டர்ஸ் செய்தியாளரான இஸ்ஸாம் அப்துல்லா இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் அக்டோபர் 13ஆம் தேதி கொல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
இஸ்ரேல்