மலேசியாவில் விலை கட்டுப்பாட்டால் அரிசி தட்டுப்பாடு

மலேசியாவில் விலை கட்டுப்பாட்டால் அரிசி தட்டுப்பாடு

2 mins read
9ac99b67-5b91-42d5-bf87-05612c6661b2
மலேசியாவில் உள்ள அரிசி விளையும் வயல். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் விலையைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நடப்பில் இருப்பதால் அந்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விலைக் கட்டுப்பாடுகளால் அரிசி விற்பனையில் லாபம் பார்ப்பது சிரமமாக உள்ளது. அதனால் விவசாயிகளாலும் விற்பனையாளர்களாலும் கூடுதல் அளவில் அரிசியை விளைவிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் தயாராகும் அரிசியின் விலை கிலோவுக்கு 2.60 ரிங்கிட்டைத் (0.75 வெள்ளி) தாண்டக்கூடாது என்ற விதிமுறை 2008ஆம் ஆண்டிலிருந்து நடப்பில் உள்ளது.

பணவீக்கத்தைக் கையாள பயனீட்டாளர்களுக்கு உதவுவது அரசாங்கம் மேற்கொள்ளும் இந்நடவடிக்கையின் நோக்கம். எனினும், இதனால் பொருளியல் சூழலுக்கு ஏற்ற விலையில் அரிசியை விற்கமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும் அரிசித் துறைக்கும் இடையில் இருந்துவரும் அதிருப்தி இவ்வாண்டு உச்சத்தைத் தொட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

உலகின் ஆகப் பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா, இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் சில வகை அரிசியை ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து உலகளவில் அரிசி விலை கணிசமாக அதிகரித்தது.

அதன் காரணமாக மலேசியாவில் அண்மைய மாதங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை அதிக அளவு கூடியதால் குறைந்த விலையில் கிடைக்கும் உள்ளூர் அரிசிக்கான தேவை பெரிதும் அதிகரித்தது.

ஆனால், அரிசி விளைச்சலுக்கான செலவு அதிகரித்திருப்பதால் அதற்கு ஈடுகட்டும் வகையில் வருவாய் இருந்தால் மட்டுமே தங்களால் கூடுதல் அளவில் அரிசியை விளைய வைத்து வழங்கமுடியும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

நிலைமையைச் சமாளிக்க மலேசிய அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரிசி விவசாயிகளுக்கான சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, அரிசி விநியோகச் சங்கிலி கூர்ந்து கவனிக்கப்படுவது அவற்றில் அடங்கும்.

எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் போதாது என்று சிலர் சொல்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவிவசாயம்அரிசி