காஸா போர்: அரபுத் தலைவர்களுடன் அமெரிக்கா சந்திப்பு

காஸா போர்: அரபுத் தலைவர்களுடன் அமெரிக்கா சந்திப்பு

2 mins read
69b799f1-93f4-4c22-b0cb-d86af4fc62c0
ஜோர்தான் தலைநகர் அம்மானில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், கத்தார் பிரதமர், வெளியுறவு அமைச்சர் முகமது அப்துல்ரஹ்மான் அல்-தானி ஆகியோரைச் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

காஸா நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், சனிக்கிழமையன்று ஜோர்டானில் அரபுத் தலைவர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சந்திக்கிறார்.

முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்க மனிதாபிமான தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வெள்ளியன்று நிராகரித்ததை அடுத்து, சண்டை மூர்க்கமடைந்துள்ளது.

தெற்கு காஸா உட்பட தீவிர வான்வழி, பீரங்கி தாக்குதலை பாலஸ்தீனர்கள் ஒரே இரவில் நடத்தியுள்ளனர். போர் வட்டார அளவில் பெரிதாவதைத் தடுக்கும் முயற்சியாக பிளிங்கன் அரபு அரசதந்திரிகளைச் சந்திக்கிறார்.

ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் அரசதந்திரகளையும் ஹமாஸுக்கு எதிரான பாலஸ்தீன அதிகாரிகளையும் சந்திக்க பிளிங்கன் அம்மான் சென்றுள்ளார்.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த மாதம் போா் தொடங்கிய பிறகு இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக பிளிங்கன் அக்டோபர் 12ஆம் தேதி இஸ்‌ரேலுக்குச் சென்றார். போா் தொடங்கி ஏறத்தாழ 4 வாரங்கள் ஆன நிலையில், பிளிங்கன் மீண்டும் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் சென்றுள்ளார்.

இந்த முறை, காஸாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் போா் நிறுத்தத்தை அறிவிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவா் நேரில் வந்ததாகக் கூறப்படுகிறது.

“ஹமாஸுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். இருந்தாலும், காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகவும், அவசரமாகவும் உள்ளது,” என்று டெல் அவீவ் நகரில் செய்தியாளா்களிடம் பேசியபோது அவர் சொன்னார்.

தனி பாலஸ்தீன நாடு உருவாக்கப்படுவது மட்டுமே இஸ்ரேல், யூதா்களின் நிரந்தர பாதுகாப்புக்கான ஒரே தீா்வு என்று பிளிங்கன் வலியுறுத்தியுள்ளாா்.

இரு தரப்பு மக்களுக்குமான நாடுகளை தனித்தனியாக உருவாக்குவதுதான் இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீா்வாகும் என்றார் அவர்.

பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக குடியேறி வந்த யூதா்கள் இஸ்ரேல் உருவாக்கத்தை 1948ல் பிரகடனம் செய்தாா்கள். இஸ்‌ரேலை ஐநாவும் மேற்கத்திய நாடுகளும் அங்கீகரித்தபோதும், ஹமாஸும், ஏராளமான முஸ்லிம் நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. இஸ்ரேலும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 28 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,800ஐ கடந்துள்ளது.

இதற்கிடையே, சோவியத் ஒன்றியம் எப்படி அழிந்து போனதோ அதேபோல அமெரிக்காவும் அழிக்கப்படும் என்று ஹமாஸ் முக்கிய தளபதிகளில் ஒருவரான அலி பராக்கா நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஸா மீதான தாக்குதலுக்கு அமெரிக்காதான் முழுக் காரணம் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் சாடியுள்ளார். காஸா மீதான தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை என்பது வட்டார அளவில் பெரிதாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காஸாஅமெரிக்கா