ஏர்ஏஷியா தலைமை நிர்வாகி மீது விமர்சனம்

சட்டையின்றி உடற்பிடிப்புச் சேவை பெற்றுக்கொண்டு நிர்வாகச் சந்திப்பு

ஏர்ஏஷியா தலைமை நிர்வாகி மீது விமர்சனம்

2 mins read
efcd1c23-1a04-46bb-91f3-c10142ed0117
சட்டையின்றி உடற்பிடிப்புச் சேவை பெற்றுக்கொண்டு நிர்வாகச் சந்திப்பு நடத்தும் படத்தை சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்தார் திரு டோனி ஃபெர்னாண்டெஸ். - டோனி ஃபெர்னாண்டெஸ்/லிங்க்ட்இன்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: சட்டை அணியாமல் உடற்பிடிப்புச் சேவை பெற்றவாறு காணொளி அழைப்பில் தாம் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஏர்ஏஷியா தலைமை நிர்வாகி டோனி ஃபெர்னாண்டெஸ் கடும் விமர்சனத்தை எதிர்நோக்குகிறார்.

‘லிங்க்ட்இன்’ சமூக ஊடகத்தில் திரு ஃபெர்னாண்டெசை பின்தொடர்பவர்களில் சிலர், அவர் எல்லையை மீறிவிட்டதாகக் குறைகூறினர்.

தமது ‘லிங்க்ட்இன்’ பக்கத்தில் திரு ஃபெர்னாண்டெஸ் வெளியிட்ட பதிவில், “இந்தோனீசியாவையும் ஏர்ஏஷியா கலாசாரத்தையும் விரும்ப வேண்டும். உடற்பிடிப்புச் சேவை பெற்றுக்கொண்டே நிர்வாகச் சந்திப்பு நடத்த முடிகிறது,” என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது.

மனவுளைச்சல் நிறைந்த வாரமாக இருந்ததால் அதன் பிறகு உடற்பிடிப்புச் சேவையை பெண் சக ஊழியர் ஒருவர் பரிந்துரைத்ததாக திரு ஃபெர்னாண்டெஸ் சொன்னார்.

அப்பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கும் நிர்வாகி ஒருவர், மேலாடை இல்லாமல் தனிப்பட்ட பராமரிப்பு பெறுவது முறையற்றது என்று இணையவாசிகள் சிலர் கருத்துரைத்தனர்.

திரு ஃபெர்னாண்டெசை விமர்சித்தவர்களில் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றிய ரெபெக்கா நடில்லோவும் ஒருவர்.

“உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் மகளிர் இச்சூழலில் பாதுகாப்பாகவோ சௌகரியமாகவோ உணர்வர் என்று எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் முதலாளி என்ற அடிப்படையில், அனேகமாக அவர்கள் உங்களைச் சவால்விடவோ எதையும் சொல்லவோ மாட்டார்கள்,” என்று திருவாட்டி நடில்லோ பதிவிட்டார்.

பதினெட்டு மணி நேர விமானப் பயணம் மேற்கொண்டதில் தமக்கு உடல்வலி ஏற்பட்டதாகச் சொன்ன திரு ஃபெர்னாண்டெஸ், இந்தோனீசியாவில் வேறொருவர் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையிலே தமக்கு உடற்பிடிப்புச் சேவை வழங்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

மற்றொரு பக்கம், இணையவாசிகள் சிலர் நகைச்சுவையாகவும் கருத்துரைத்தனர். நெஞ்சுப் பகுதியைக் காட்டுவதில் துணிச்சல் கொண்ட திரு ஃபெர்னாண்டெசை சிலர் பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்