புகைமூட்டத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மலேசியர்களுக்கு அறிவுரை

புகைமூட்டத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மலேசியர்களுக்கு அறிவுரை

2 mins read
fc0ca5bb-4632-4b88-b46c-b11172b94572
அக்டோபர் மூன்றாம் தேதியன்று புகைமூட்டமாகக் காணப்பட்ட மலேசியத் தலைநகர் கோலாலம்பூர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் மீண்டும் புகைமூட்டப் பிரச்சினை எழுந்திருப்பதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் காற்றுத்தூய்மைக்கேட்டின் அளவு ஏபிஐ எனும் குறியீட்டைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஏபிஐ குறியீடு 100ஐத் தாண்டினால் அது காற்றுத்தூய்மைக்கேடு அபாயக் கட்டத்தில் இருப்பதைக் குறிக்கும்.

ஏபிஐ குறியீடு 101லிருந்து 200க்குள் பதிவாகும் இடங்களில் வசிப்போர் வெளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும் புகைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் மலேசிய சுகாதார அமைச்சு அறிவுரை வழங்கியுள்ளது. புகைப்பிடித்தல் காற்றுத்தூய்மைக்கேட்டை மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்று.

சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாவதைத் தவிர்க்க சன்னல்களையும் கதவுகளையும் மூடி வைத்திருக்கவேண்டும் என்றும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

புதன்கிழமை சமூக ஊடகங்களின் வாயிலாக அமைச்சு இந்த ஆலோசனைகளை வழங்கியது.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு குவளை நீர் அருந்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

உடலின் நீர் சத்தைக் குறைக்கக்கூடிய மதுபானம், காபி போன்ற பானங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

வாகனம் ஓட்டும்போது உள்ளே குளிர் சாதனக் கருவியைப் பயன்படுத்துமாறு ஓட்டுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வாகனத்துக்குள் காற்றோட்டமாக இருக்க வகைசெய்யும் குளிர்சாதனக் கருவி முறையைப் பயன்படுத்துவது நல்லது என்றும் கூறப்படுகிறது.

காற்றைச் சுத்தம் செய்யும் இயந்திரங்களை வீட்டில் பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு பரிந்துரைக்கிறது. உடல்நலம் சரியில்லாதோர் மருத்துவ உதவியை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அசுத்தக் காற்று உள்ள இடங்களில் அதிக நேரம் செலவிட்டால் தொண்டைக் கரகரப்பு, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் எழலாம் என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாபுகைமூட்டம்கோலாலம்பூர்பருவநிலை