தென்கொரியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

தென்கொரியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

2 mins read
cf9c8d7f-928f-4f58-93c1-2b257164fc6a
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் உறுதி அளித்துள்ளார். - படம்: தமிழ் முரசு
Google News Preferred Icon

சோல்: தென்கொரியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் பாதுகாப்புடன் இருக்க அத்தகைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்கொரிய அதிபர் யூ சுக் யோல் உறுதி அளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 38 வயது பெண் ஒருவர் அவரது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டார். இன்சியோன் நகரில் அவரது வீட்டு வாசலில் அவரை அந்த ஆடவர் கத்தியால் பலமுறை குத்திக்கொன்றார்.

தமது முன்னாள் காதலர் தமக்குத் தொல்லை தருவதாக அப்பெண் புகார் செய்திருந்தார். அந்த ஆடவர் அப்பெண் அருகில் செல்லக்கூடாது என்று தற்காலிகக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், அப்பெண்ணை அந்த ஆடவர் கொன்றார்.

எனவே, தென்கொரிய சட்டம் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பைத் தரவில்லை என்ற குரல்கள் எழுந்துள்ளன.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பூசான் நகரில் ஒரு பெண்ணை ஆடவர் ஒருவர் தாக்கினார். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்றார்.

அதற்கு முன்பு அவர் 18 முறை சிறைத் தண்டனை அனுபவித்தவர். இம்முறை அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.

ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த ஆடவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அவர் விடுவிக்கப்பட்டதும் தம்மைக் கொன்றுவிடுவார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அச்சம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பொதுமக்களிடமிருந்து அதிருப்திக் குரல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அந்த ஆடவருக்கு முதலில் விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையையே விதித்தது.

பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் தொடர்பில் கடுமையான, போதுமான தண்டனை விதிக்கப்படுவதில்லை என்று தென்கொரிய மக்கள் குறைகூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியா