சீக்கியத் தலைவர் கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என இந்தியா கூறுவதை ஏற்க ட்ரூடோ மறுப்பு

சீக்கியத் தலைவர் கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என இந்தியா கூறுவதை ஏற்க ட்ரூடோ மறுப்பு

2 mins read
2d267f39-f5cf-4869-b389-74add02040d8
கடந்த ஜூன் மாதம் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருந்ததாக நாடாளுமன்றத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்கட்கிழமை கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஒட்டாவா: கனடாவில் சீக்கியத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்தியா கூறியதை ஏற்க கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியாக மறுத்துவிட்டார்.

கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் தமது நாட்டின் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகக் கருதும்படி இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நாங்கள் யாரையும் தூண்டிவிடவோ பிரச்சினையைத் தீவிரமடையவோ செய்யவில்லை. எங்களுக்குத் தெரிய வந்துள்ள உண்மைகளை மட்டுமே நாங்கள் முன்வைக்கிறோம். இதுகுறித்து இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் திரு ட்ரூடோ.

கடந்த ஜூன் மாதம் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருந்ததாக கனடிய நாடாளுமன்றத்தில் திரு ட்ரூடோ திங்கட்கிழமை கூறினார்.

மேற்கு கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு அருகே திரு நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியப் பிரிவினைவாதத் தலைவரான அவர், கனடியக் குடிமகனாக இருந்தார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாகக் கூறிய திரு ட்ரூடோ, அதை நியாயப்படுத்துவதற்கான மேல்விவரங்களை வழங்கவில்லை.

சில வாரங்களாக கனடியப் பாதுகாப்பு அமைப்புகள் நாடிய நம்பகமான குற்றச்சாட்டுகளை மட்டுமே அவர் சுட்டினார்.

திரு நிஜாரின் கொலை வழக்கில் தொடரும் காவல்துறை விசாரணையையும் உளவுத்துறை தகவல் சேகரிக்கும் முறையைப் பாதுகாக்க வேண்டியதன் தேவையையும் சுட்டிய பாதுகாப்பு அமைப்புகள், இதுகுறித்த மேல்விவரம் வெளியிட மறுத்துவிட்டன.

பெயர் குறிப்பிட விரும்பாத கனடிய அரசாங்க அதிகாரி ஒருவர், உளவுத்துறை தகவல்களைப் பல நாடுகள் சேகரித்ததாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் எனும் சீக்கிய தேசத்தை உருவாக்க தொடங்கப்பட்ட இயக்கத்தில் திரு நிஜார் துடிப்புடன் செயல்பட்டு வந்தார்.

குறிப்புச் சொற்கள்