‘சிலாங்கூர், நெகிரி, பினாங்கை ஆளுங்கட்சி தக்கவைத்துக்கொள்ளும்’

3 mins read
74867ccd-c93f-4f8a-b5ae-d9b65c924d26
தீவிர பிரசாரம் மேற்கொண்ட மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் இம்மாதம் 12ஆம் தேதியன்று சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களை ஆளுங் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி கூட்டணி தக்கவைத்துக்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உள்ள பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரத்தின்போது ஆளுங்கூட்டணிக்கு நல்ல ஆதரவு இருப்பது தெரிவதாகக் கூறப்படுகிறது.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவரும் மலேசியப் பிரதமருமான அன்வார் இப்ராகிம் கலந்துகொண்டார்.

அவரது கனல் கக்கும் பேச்சு ஆளுங்கூட்டணியின் நிலையை வலுப்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மாநில மக்களை ஈர்க்கும் தேர்தல் அறிக்கை, ஆட்சி பீடத்தில் ஏறியதிலிருந்து நாட்டை செவ்வனே நிர்வகித்து வருவது ஆகியவை அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஆளுங்கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

மாறாக, மலாய், இஸ்லாமியர்கள் வாக்குகளை அதிகம் எதிர்பார்த்துத் திரட்ட முற்படும் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் பெரும் சவாலை எதிர்நோக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் 56 இடங்களும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் 36 இடங்களும் பினாங்கு சட்டமன்றத்தில் 40 இடங்களும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களில் மூடா, மலேசிய சமத்துவக் கட்சி, மலேசிய மக்கள் கட்சி, பினாங்கு முன்னணி கட்சி போன்ற பல்வேறு கட்சிகள் போட்டியிடும்போதிலும் ஆளுங்கூட்டணிக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவும் என்று நம்பப்படுகிறது.

பெரிக்காத்தான் நேஷனலில் பெர்சத்து கட்சியும் இஸ்லாமிய கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சியும் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டணிக்கு முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தலைமைதாங்குகிறார்.

சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி கூட்டணியின் தேர்தல் பிரசாரம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு சுமுகமான முறையில் நடைபெற்றதால் அங்கு அதன் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் துணை உதவி வேந்தரான இணைப் பேராசிரியர் டாக்டர் ஹம்டான் முகம்மது சாலே கூறினார்.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் உள்ள 56 இடங்களில் 37 இடங்களை ஆளுங்கூட்டணி கைப்பற்றும் என்று அவர் முன்னுரைத்துள்ளார். அவற்றில் சபாம், உலு பெர்னாம், சுங்கை புரோங், புக்கிட் மெலாவத்தி, குவாங், தாமான் டெம்பிலர், உலு கிளாங், லெம்பா ஜெயா, பயா ஜராஸ்,பெலபுஹான் கிள்ளான் ஆகிய இடங்கள் அடங்கும் என்றார் அவர்.

சிலாங்கூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்டதை அடுத்து, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தோர் ஆளுங்கூட்டணியின் பக்கம் சாய்ந்திருப்பதாக டாக்டர் ஹம்டான் தெரிவித்தார்.

கடந்த மாதம் 29ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சந்தைகள், உணவகங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று வாக்காளர்களை வேட்பாளர்கள் நேரில் சந்தித்தனர்.

சமூக ஊடகம் மூலமாகவும் வேட்பாளர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, பினாங்கு மாநிலத்தின் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் பகுப்பாய்வாளர் பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன் கூறினார்.

ஆனால் வெற்றியாளர்களை நிர்ணயிப்பதில் பிரசாரத்தின் இரண்டாம் கட்டம், குறிப்பாக வாக்களிப்புக்கு மூன்று நாள்கள் இருக்கும்போது வாக்காளர்களின் மனநிலை மிகவும் முக்கியம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்