‘முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் எந்தத் தவறும் செய்யவில்லையென என்னைச் சொல்லச் சொன்னார்’

‘முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் எந்தத் தவறும் செய்யவில்லையென என்னைச் சொல்லச் சொன்னார்’

3 mins read
d16f5835-5929-4383-a499-084cf9111f65
நஜிப் மீதான 2.3 பில்லியன் ரிங்கிட் கையாடல் வழக்கின் தொடர்பில் திருவாட்டி செட்டி அரசாங்கத் தரப்பில் சாட்சியம் அளித்தார்.  - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தனது சொந்த வங்கிக் கணக்கில் வைத்திருந்த 2.6 பில்லியன் ரிங்கிட் ($770 மில்லியன்) தொடர்பில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுமாறு தம்மைக் கேட்டுக்கொண்டதாக பேங்க் நெகாரா மலேசியா வங்கியின் முன்னாள் ஆளுநர் செட்டி அக்தார் அஜீஸ் உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஆனால், அவரது வங்கிக் கணக்கு பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்பதால் அந்தக் கோரிக்கைக்கு உடன்பட மறுத்துவிட்டதாகத் திருவாட்டி செட்டி தெரிவித்தார்.

“நான் பிரதமர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். அவர் (நஜிப்) தனது கணக்கில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அறிக்கை வெளியிடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்,” என்றார் அவர்.

“அவரது கணக்கிலிருந்த பரிவர்த்தனைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால் அப்படியோர் அறிக்கையை என்னால் வெளியிட முடியாது என்று அவரிடம் சொன்னேன். என்னுடைய இந்தத் தீர்மானத்தை அவர் ஏற்றுக்கொண்டார்,” என்று அவர் கூறினார்.

நஜிப் மீதான 2.3 பில்லியன் ரிங்கிட் கையாடல் வழக்கின் தொடர்பில் திருவாட்டி செட்டி அரசாங்கத் தரப்பில் சாட்சியம் அளித்தார்.

பிரதமரைச் சந்தித்த பிறகு, ஓர் அமைச்சர் அவரைத் தொலைபேசியில் அழைத்து, அதே கோரிக்கையை விடுத்ததாகவும், அதே பதிலை அவரிடமும் கூறியதாகவும் திருவாட்டி செட்டி தெரிவித்தார்.

அந்தச் சமயத்தில் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு 2.6 பில்லியன் ரிங்கிட் அனுப்பப்பட்டிருந்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார் 76 வயது திருவாட்டி செட்டி.

மலேசியாவின் கள்ளப்பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ், சந்தேகத்திற்குரிய அல்லது வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனைகள் பேங்க் நெகாரா வங்கியிடம் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், நஜிப்பின் வங்கிக் கணக்கு தொடர்பான 500க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை எம்பேங்க் தெரியப்படுத்தாததே அச்சமயத்தில் முக்கிய அக்கறையாக இருந்ததாக அவர் கூறினார்.

நஜிப்பின் எம்பேங்க் கணக்குக்கு நன்கொடைகள் அனுப்பப்படும் என்றும் எம்பேங்க் குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் திரு சியா டெக் குவாங் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.

“ஆறு வாரத்திற்குப் பிறகு, 2011 மார்ச் 22 தேதியிட்ட கடிதத்தை அப்போதைய துணை ஆளுநர் நூர் ‌ஷம்சியா முகமது யூனோசுக்கு சியா அனுப்பினார். சவுத் அப்துல் அஜீஸ் மஜித் அல் சவுத் என்பவரின் நன்கொடைக்கான உறுதிக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

“பின்னர், 2013 ஜூன் 20ம் தேதியிட்ட கடிதத்தில், தனது கணக்கிலிருந்த 2.26 பில்லியன் ரிங்கிட்டையும் அமெரிக்க டாலராக மாற்ற நஜிப் அனுமதி கோரியிருந்தார். ஒட்டுமொத்த பணத்தையும் திருப்பித் தருவது அல்லது அனுப்புவது அதற்கான நோக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“அந்தப் பணத்தைப் பயன்படுத்தப்படாத நன்கொடை மற்றும் தனிப்பட்ட அன்பளிப்பு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்,” என்றார் திருவாட்டி செட்டி.

இதற்கிடையே, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடம் பேங்க் நெகாரா சமர்ப்பித்த புலனாய்வு அறிக்கையில் 1எம்டிபி மீதும் மூத்த அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். ஆனால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்