சுவீடன் தூதரகத்தைக் கொளுத்திய ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

சுவீடன் தூதரகத்தைக் கொளுத்திய ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

2 mins read
18145ad4-b038-41aa-808e-82fbe82afeb1
பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை ஈராக்கிய காவல்துறையினர் தடுக்கின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பாக்தாத்: வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் மத்திய பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தினுள் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சுவரேறிக் குதித்து கட்டடத்தைக் கொளுத்திவிட்டனர். சுவீடனில் குர்ஆன் எரிக்கப்படவிருந்ததை எதிர்ப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

பாக்தாத் தூதரகப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக சுவீடன் வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. தாக்குதலை வன்மையாகக் கண்டித்த அமைச்சு, ஈராக்கிய அதிகாரிகள் தூதரகங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ‌ஷியா முஸ்லிம் சமயகுரு முக்தாடா சதரின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்ததாக அவரைச் சார்ந்த டெலிகிராம் குழுவின் பதிவுகள் காட்டுகின்றன. திரு சதருக்குப் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். 

சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள ஈராக்கியத் தூதரகத்திற்கு வெளியே வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சுவீடன் காவல்துறையினர் புதன்கிழமை அனுமதி அளித்தனர். அந்தக் கூட்டத்தில் இருவர் பங்குபெறவிருந்ததாகக் காவல்துறை வழங்கிய அனுமதி தெரிவித்தது.

அவ்விருவரும் பொதுக்கூட்டத்தில் குர்ஆனையும் ஈராக்கியக் கொடியையும் எரிக்கத் திட்டமிட்டிருந்ததாக சுவீடனின் டிடி செய்தி நிறுவனம் தெரிவித்தது. இருவரில் ஒருவர், ஜூன் மாதம் ஸ்டாக்ஹோம் பள்ளிவாசல் ஒன்றுக்கு வெளியே குர்ஆனை எரித்தவர். 

இந்தப் பொதுக்கூட்டத்தை எதிர்க்கவே வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுவீடன் தூதரகத்தில் கூடத் தொடங்கியதாகக் காணொளிப் பதிவுகள் காட்டுகின்றன. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, கூட்டத்தினர் தூதரகத்தினுள் அத்துமீறி நுழைந்தனர். 

பின்னர், தூதரக வளாகத்திலிருந்த ஒரு கட்டடத்திலிருந்து புகை கிளம்புவதைக் காட்டும் காணொளிகள் வெளியிடப்பட்டன. ஆனால், அந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மையை ராய்ட்டரால் உறுதிப்படுத்த இயலவில்லை. 

பொழுது விடிவதற்குள், ஈராக்கியப் பாதுகாப்புப் படையினர் தூதரகத்தினுள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.

குறிப்புச் சொற்கள்