மேற்கு கரை நகரைத் தாக்கிய இஸ்ரேல்; இருவர் உயிரிழப்பு

மேற்கு கரை நகரைத் தாக்கிய இஸ்ரேல்; இருவர் உயிரிழப்பு

2 mins read
6ab0dd59-b979-40d2-ae35-69b55899d68f
மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட பாலஸ்தீன போராளிகள். - படம்: இபிஏ
Google News Preferred Icon

ஜெருசலேம்: ஜெனின் மேற்குக் கரை நகரத்தின்மீது இஸ்ரேலியப் படைகள் இரண்டு வாரத்திற்குள்ளாகவே இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியிருக்கிறது.

திங்கட்கிழமை இரவு ஆளில்லா வானூர்தி மூலம் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதனால் காலை வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர்.

வானூர்தி தாக்குதலுக்குப் பிறகு நகரம் முழுவதும் துப்பாக்கிச்சூடு, வெடிமருந்துகளின் சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தது. குறைந்தது ஆறு வானூர்திகள் அகதிகள் முகாமுக்கு அருகே வட்டமடித்துக் கொண்டிருந்தன. இங்குதான் அரை சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கும் குறைவான இடத்தில் இருக்கும் வீடுகளில் 14,000 பேர் வசிக்கின்றனர்.

“அகதிகள் முகாமில் நடந்தது உண்மையான போர்,” என்று பாலஸ்தீன அவசர வாகன ஓட்டுநர் காலித் அலாஹமட் தெரிவித்தார்.

“வானிலிருந்து முகாம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஐந்து முதல் ஆறு அவசர வாகனங்களை இயக்கியபோது காயம் அடைந்தவர்களுடன் திரும்பினோம்,” என்றார் அவர்.

பாலஸ்தீன சுகாதார அமைச்சு ஜெனினில் குறைந்தது மூவர் உயிரிழந்ததையும் 27 பேர் காயம் அடைந்ததையும் உறுதிசெய்தது.

ரமல்லா நகர சோதனைச் சாவடியில் தலையில் சுடப்பட்டு மேலும் ஒருவர் உயிரிழந்தார் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

ஜெனின் படைப் பிரிவைச் சேர்ந்த போராளிகளுக்கான கட்டளை நிலையமாக செயல்பட்ட கட்டடத்தை குறி வைத்து தனது படைகள் தாக்கியதாக இஸ்ரேலியப் படை தெரிவித்தது.

இது, மேற்குக் கரையில் நடந்த விரிவான பயங்கரவாத எதிர்ப்பு முயற்சியின் ஒரு பகுதி என்று அது குறிப்பிட்டது.

இஸ்ரேல், கடைசியாக 2006ல் வானூர்திகளைப் பயன்படுத்தி மேற்குக் கரையைத் தாக்கியது.

அதன் பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி ஜெனினுக்கு அருகே வானூர்திகளால் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக திங்கட்கிழமை வானூர்திகளைக் கொண்டு இஸ்ரேல் தாக்கியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்