நான்கு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழக்கக்கூடும்

நான்கு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் வேலை இழக்கக்கூடும்

2 mins read
1ac97db4-d562-414e-bbfc-876e42d59329
மலேசியாவில் 900 ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க மனிதவள அமைச்சு நோக்கம் கொண்டுள்ளது.  - படம்: தி ஸ்டார்
Google News Preferred Icon

ஷா ஆலம்: செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், தங்கள் திறன்களை மேம்படுத்தாவிட்டாலோ திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் சேர்ந்துகொள்ளாவிட்டாலோ, 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் ஏறக்குறைய 4.5 மில்லியன் பேர் தங்கள் வேலைகளை இழக்கக்கூடும். மலேசிய மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் அவ்வாறு கூறினார்.

2020ஆம் ஆண்டின் உலகப் பொருளியல் கருத்தரங்கின் அறிக்கையின் அடிப்படையில் அந்தத் தகவலை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

வேலைச் சந்தையில் செயற்கை நுண்ணறிவால் மந்தநிலை ஏற்படக்கூடும் என்று அவ்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததை அவர் சுட்டினார்.

உற்பத்தி, சுகாதாரப் பராமரிப்பு, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பணியில் இருக்க, 50 விழுக்காட்டு ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாறிவரும் காலத்திற்குப் பொருத்தமாக இருப்பதற்கு, தேசிய ஊழியரணியைத் திறன்வாய்ந்த ஊழியரணியாக மாற்றுவதற்கான உடனடித் தேவை இருப்பதாக அறிக்கை கூறியது.

“இருப்பினும் புதிதாக உருவாக்கப்படும் வேலைகள் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படமுடிவதால் நமக்கு நல்லது,” என்றார் திரு சிவகுமார்.

திறன்களை மேம்படுத்துவதற்கான தேவை வாழ்க்கைத் தொழில் மேம்பாட்டுக்கு மட்டுமல்லாமல், வேலையில் தொடர்ந்து நீடிப்பதற்கும் அவசியம் என்று அவர் கூறினார். சிலாங்கூர் மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் நடைபெற்ற தொழில்துறை திறனாளர் மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

மனிதவள அமைச்சு ‘டேலன்ட்கார்ப்’ நிறுவனத்துடன் இணைந்து திறன் மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் மூலம் அத்திட்டத்தை உருவாக்கியது.

தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்தி, மலேசியாவில் 900 ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க அமைச்சு நோக்கம் கொண்டுள்ளது. ஏறத்தாழ 630 ஊழியர்களுக்கு இத்திட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள்.

ஊழியர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக, 7.2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவகுமார் கூறினார். திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் நிறுவனம் மூலமாகவோ அவரவர் மாநிலங்களில் உள்ள திறன் மேம்பாட்டு நிலையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவேலை