65% வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்

1 mins read
90c3b575-7314-4e3a-9e72-3c6431ebb137
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பனிப்பாறைகள் 80 விழுக்காடு வரை உருகக்கூடும். - படம்: ராய்ட்டர்ஸ்

காட்மாண்டு: இமயமலைப் பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் 2011, 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அதற்கு முந்திய 10 ஆண்டுகளில் உருகியதைவிட 65 விழுக்காடு வேகமாக உருகியிருக்கின்றன.

ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு அனைத்துலக நிலையம் (ஐசிஐஎம்ஒடி) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது. பருவநிலை மாற்றம் இதற்குக் காரணம்.

இதனால் எதிர்பாராத நேரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பேரிடர்கள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இமய மலைப் பனிப்பாறைகள் 80 விழுக்காடு வரை உருகலாம் என்றும் நேப்பாளத்தில் இருக்கும் ஐசிஐஎம்ஒடி தெரிவித்தது.

ஐசிஐஎம்ஒடி, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட அரசாங்க நிலை அமைப்பு.

ஆசியாவில் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் மக்கள் இமயமலைப் பனிப்பாறைகளிலிருந்து வரும் நீரை சார்ந்திருக்கின்றனர்.

அதனால் இந்நிலை தொடர்ந்தால் பின்விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கும் என்று ஐசிஐஎம்ஒடி இணைத் தலைவர் இஸாபெலா கொஸியெல் எச்சரித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தைக் கையாள உடனடி நடவடிக்கை அவசியம் என்பதை இது வலியுறுத்துவதாக ஐசிஐஎம்ஒடி அறிக்கைக்கான மூத்த ஆசிரியர் ஃபிலிப்பஸ் வெஸ்டர் குறிப்பிட்டார். மேலும் பனிப்பாறைகள் உருகுவதை முன்கூட்டியே கண்டறியும் வகையில் தொழில்நுட்பம் மேம்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்