ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரையும் அண்டை நாடான சிங்கப்பூரையும் இணைக்கும் விரைவு ரயில் சேவை இரு நாடுகளுக்கும் ஆக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார். சிங்கப்பூருக்கு மேற்கொண்ட மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தின் கடைசி நாளான நேற்று அவர் இவ்வாறு சொன்னார்.
"விரைவு ரயில் சேவை வர்த்தக விவகாரங்களுக்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது," என்று திரு ஒன் ஹாஃபிஸ், ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனைச் சந்தித்த பிறகு அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை கட்டமைப்பை 2026ஆம் ஆண்டிறுதிக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நான்கு கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு பயணிகள் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் வட்டாரத்திலிருந்து ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகாருக்கு ஐந்து நிமிடங்களில் செல்லலாம். திரும்பி வருவதற்கும் அதே நேரம்தான் ஆகும்.
விரைவு ரயிலில் ஒரு மணிநேரத்தில் 10,000 பயணிகள் வரை இந்தப் பாதைவழி பயணம் செய்யலாம். விரைவு ரயில் சேவை, சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் பெருவிரைவு ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
காஸ்வே கடற்பாலத்தின் ஜோகூர் பாருவின் குடிநுழைவு சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிள்களுக்கென கூடுதல் சாலைத் தடங்களை அமைப்பது குறித்து ஜோகூர் மாநில அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் திரு ஒன் ஹாஃபிஸ் தெரிவித்தார். காஸ்வே பாலத்தில் பயண நேரம், குடிநுழைவுச் சோதனைக்கான நேரம் ஆகியவற்றைக் குறைப்பது அதன் இலக்கு.

