ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபர் வேட்பாளரை அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ (படம்) முடிவு செய்வார் என்றும் எந்தவோர் உயர் பதவியை வகிக்கும் திட்டமும் ஜோக்கோவிக்கு இல்லை என்றும் இதுபற்றி நன்கு அறிந்த ஒருவர் கூறினார்.
வரும் 2024ஆம் ஆண்டில் இந்தோனீசியா பொதுத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. ஏற்கெனவே இரண்டு தவணைக் காலம் அதிபராக பதவி வகித்துவிட்ட ஜோக்கோவி, இனியும் அப்பதவிக்குப் போட்டியிட முடியாது.
இந்நிலையில், ஜோக்கோவியால் பரிசீலிக்கப்படும் அதிபர் வேட்பாளர்களில் 70 வயதான தற்காப்பு அமைச்சர் பிரபோவோ முக்கிய இடம் பிடித்துள்ளதாக தகவலறிந்த ஒருவர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சொன்னார்.
துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்களை அடுத்த ஆண்டு பிரபோவோ அறிவிப்பார்.
மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சர் பிரனோவோ, ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வேடன் ஆகியோர் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் மற்ற இருவர் ஆவர். அதிபர் வேட்பாளர் குறித்த தனது அதிகாரபூர்வ அறிவிப்பை ஜோக்கோவி எப்போது வெளியிடுவார் என்பது தெளிவாக தெரியவில்லை.

