ஐஃபோன்களையும் ஐபேட்களையும் பாதிக்கவல்ல 'ஸீரோ கிளிக்' உளவு மென்பொருளைத் தடுக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் 'ஐஓஎஸ்' இயங்குதளத்தை மேம்படுத்தி இருக்கிறது.
ஐஃபோன் பயனாளர்கள் ஓர் இணைப்பைச் சொடுக்காதபோதும் அல்லது ஒரு கோப்பைத் திறக்காதபோதும் இணைய ஊடுருவிகள் 'ஐமெசேஜ்' சேவை மூலமாக அத்திறன்பேசிகளுக்குள் ஊடுருவ முடியும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பாதுகாப்புக் குறைபாடு, ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து இயங்குதளங்களையும் பாதிக்கவல்லது என்று ஆய்வாளர்கள் கூறினர்.
இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டை டொரோன்டோ பல்கலைக்கழகத்தின் 'சிட்டிசன் லேப்' முதன்முதலில் சுட்டிக்காட்டியது.
இஸ்ரேலைச் சேர்ந்த இணையக் கண்காணிப்பு நிறுவனமான என்எஸ்ஓ குழுமம், அந்த உளவு மென்பொருளின் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனை அந்த நிறுவனம் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
இதனையடுத்து, விரைந்து செயல்பட்ட ஆப்பிள் நிறுவனம், அந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைச் சரிசெய்து, ஐஓஎஸ் 14.8, ஐபேட்ஓஎஸ் 14.8 என மேம்படுத்தப்பட்ட இயங்குதளங்களை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் பயனாளர்கள் உடனடியாக அவற்றை நிறுவிக்கொள்வது பாதுகாப்பானது.

