தென்னமெரிக்க நாடான சிலியில் உள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த இளம் மாது ஒருவரை அங்கிருந்த புலி தாக்கியதில் அவர் நேற்று (ஆகஸ்ட் 6) உயிரிழந்ததாக போலிஸ் தெரிவித்துள்ளது.
தலைநகர் செண்டியாகோவிலிருந்து 90 கிலோ மீட்டர் தெற்கில் உள்ள ரங்காகுவா நகரில் உள்ள விலங்கியல் தோட்டத்தில் உள்ள புலி கூண்டிற்கு அருகே அந்த மாது துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
"புலிக் கூண்டு திறந்திருந்ததை அவர் கவனிக்கவில்லை. அங்கிருந்த புலி உடனடியாக அவரைத் தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்," என்று ரங்காகுவா போலிஸ் பேச்சாளர் வில்லியம்ஸ் எஸ்பினோஸா கூறினார்.
புலி தாக்கியதில் அந்த மாதின் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
போலிஸ் விசாரணை நடத்தி வரும் வேளையில் அந்த விலங்கியல் தோட்டம் வருகையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது.

