மலேசியாவில் கிளந்தான் தம்பதியர் விற்கும் ஒரு ரிங்கிட் நாசிலெம்மா உணவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஜாலான் பாசிர் மாஸ்-ரந்தாவில் கைருல் ஹஃபிஸ் மனனும், 35, அவரது மனைவி நூர்டிலா முஹமட் நாசிரும், 30, ஒரு ரிங்கிட்டுக்கு நாசி லெம்மாவை விற்று வருகின்றனர். பாண்டான் வாசனையுடன் தேங்காய் சாதம், பொரித்த நெத்திலி மீன்கள், வெள்ளரிக்காய் துண்டுகள், சுள்ளென்று உறைக்கும் சம்பால் சாந்து, வறுத்த வேர்க்கடலை ஆகிய வற்றுடன் வழங்கப்படும் நாசி லெம்மாவை பலர் ருசித்துச் சாப்பிட்டு தம்பதியரை மனதார வாழ்த்திவிட்டுச் செல்கின்றனர்.
"கிடைத்த வேலைகளைச் செய்து வந்தேன். என் மனைவி பாலர் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். கொவிட்-19 காரணமாக சரியான வேலை கிடைக்காத தால் வருமானம் ஈட்ட முடிய வில்லை. இதனால் வசதி குறைந்தவர்களுக்கு மலிவான உணவை வழங்கும் நோக்கத்தோடு இந்தக் கடையை ஆரம்பித்தோம்," என்று கைருல் ஹஃபிஸ் மனன் தெரிவித்தார். ஒரு ரிங்கிட்டுக்கு கோழித்துண்டு வைத்த நாசிலெம்மா உணவையும் அவர்கள் விற்று வருகின்றனர்.

