கொவிட்-19: இந்தியாவில் முதல் மரணம்

கொவிட்-19: இந்தியாவில் முதல் மரணம்

2 mins read
1fc4671d-f858-4364-a217-51568cffa0bf
உயிரிழந்த அந்த முதியவர் அண்மையில் சவூதி அரேபியா சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: இபிஏ -
Google News Preferred Icon

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 76 வயது முதியவரை கொரோனா கிருமி தொற்றியிருந்ததை மருத்துவச் சோதனை முடிவுகள் உறுதிசெய்தன.

கொரோனா தாக்கி மாண்ட முதல் இந்தியர் இவர்தான். இதையடுத்து, கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்தது.

"கலபுரகியைச் சேர்ந்த அந்த 76 வயது ஆடவர் கொரோனா கிருமி தாக்கி மாண்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. அதை மருத்துவச் சோதனைகளும் உறுதிசெய்துள்ளன. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன," என்று கர்நாடக சுகாதார அமைச்சர் பி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அந்த முதியவர் அண்மையில் சவூதி அரேபியா சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கூகல் நிறுவனத்தின் பெங்களூரு கிளை ஒன்றில் பணியாற்றும் ஒருவரை கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற அனைவரும் நேற்று வீட்டில் இருந்தபடி வேலை செய்தனர்.

இந்தியாவில் இதுவரை 75 பேரை கொரோனா பாதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தலைநகர் டெல்லியிலும் ஒடிசா மாநிலத்திலும் இம்மாத இறுதி வரை பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்றை மாநிலப் பேரிடராக ஒடிசா அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இம்மாதம் 22ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானில் சிக்கித் தவித்த யாத்ரிகர்கள் 44 பேர் விமானம் மூலம் இன்று பிற்பகல் மும்பை வந்து சேர்ந்தனர். மற்றவர்களையும் திரும்ப அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

#கொவிட்-19 #கொரோனா #இந்தியா

குறிப்புச் சொற்கள்