ரியாவ்வில் புகைமூட்ட அவசரநிலை அறிவிப்பு

ரியாவ்வில் புகைமூட்ட அவசரநிலை அறிவிப்பு

2 mins read
276332e5-3c62-474a-86a1-cf4fcb1a842c
ரியாவ்வில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 500க்கு மேலாக உயர்ந்தது. படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2
Google News Preferred Icon

இந்தோனீசியாவின் ரியாவ் மாவட்டத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 500க்கு மேலாக உயர்ந்ததைத் தொடர்ந்து, அங்கு புகைமூட்ட அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 23) முதல் அக்டோபர் 31 வரை அவசரநிலை நீடிக்கும் என ரியாவ் ஆளுநர் சியாம்சுவார் அறிவித்தார்.

ரியாவ் அரசாங்கம் தற்காலிக அடைக்கல நிலையங்களை அமைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இவை மக்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் பாதுகாப்பளிக்க உதவியாக இருக்கும் என்றார் அவர்.

இதற்கிடையே, இந்தோனீசியாவிலுள்ள மலேசியக் கல்வித்துறை இயக்குநர் பெக்கன்பாரு மாவட்டத்திலுள்ள மலேசிய மாணவர்களின் நிலைமை குறித்து துல்லியமான தகவல் பெறுவதற்காகச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) பெக்கன்பாருவுக்குப் புறப்பட்டார்.

மலேசிய மாணவர்கள் சிலர் தற்காலிகமாக மலேசியாவுக்குத் திரும்பிச் சென்றிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மலேசிய மாணவர்களை இந்தோனீசியாவிலிருந்து வெளியேற்றுவதன் தொடர்பில் மலேசிய ஆகாயப்படை, தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு, விஸ்மா புத்ரா ஆகியன கோலாலம்பூரில் கலந்து பேசவிருக்கின்றன.

சிங்கப்பூரில் புகைமூட்ட நிலவரம்

சிங்கப்பூரில், காற்றுத்தரம் மேம்படும் என்றும், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்படுவதால், பொதுமக்களுக்குப் புகைமூட்டத்திலிருந்து ஓரளவு விடுதலி கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை மாலை தெரிவித்தது.

இருபத்துநான்கு மணிநேர காற்றுத்தரக் குறியீடு, ஆரோக்கியமற்ற அளவிலிருந்து மிதமான அளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் பிற்பகல் 1.30 மணியளவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 89ஆகப் பதிவானது.