பங்ளாதோஷ் தலைநகர் டாக்காவின் பிரபல உணவகம் ஒன்றில் 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதலின் தொடர்பில் அந்நாட்டின் போலிஸ் படை இரண்டு சந்தேக நபர்களைக் கொன்றுள்ளது. 22 பேர் உயிரிழந்த அந்தத் தாக்குதலுக்கு ஜமாத்துல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில நபர்கள் டாக்காவின் போசிலா வட்டாரத்தில் இருந்ததாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
அங்குள்ள சிறிய வீடு ஒன்றுக்குள் கிளர்ச்சியாளர்கள் ஒளிந்துகொண்டிருந்ததை அறிந்த போலிசார், வீட்டுக் கதவைத் தட்டி உள்ளே நுழைய முற்பட்டதாக போலிஸ் சிறப்புப் படையின் சட்ட, ஊடகப் பிரிவின் தலைவர் முஃப்டி மஹ்முத் கான் தெரிவித்தார். கதவைத் திறப்பதற்குப் பதிலாக கிளர்ச்சியாளர்கள் போலிசாரை நோக்கிச் சுடத் தொடங்கியதாக அவர் கூறினார். இந்த மோதலின்போது சில வெடிபொருட்கள் வெடித்ததாகவும் அதில் இரண்டு கிளர்ச்சியாளர்கள் மாண்டதாகவும் திரு கான் தெரிவித்தார்.

