ஜகார்த்தா: இந்தோனீசிய வனப்பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க தாம் அமைத்துள்ள பணிக்குழுவின் உத்தரவுகளுக்கு அடிபணியாத நிறுவனங்கள்மீது வழக்குத் தொடர அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உத்தரவிட்டுள்ளார்.
அந்தப் பணிக்குழுவில் ராணுவ அதிகாரிகள், அரசாங்க வழக்கறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றோர் உள்ளனர். 2025ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதிமுதல் அந்தக் குழு வனப்பகுதிகளைக் கண்காணித்து வருகிறது.
வனப்பகுதி என்று ஒதுக்கப்பட்ட வட்டாரங்களைச் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டோரின் பிடியிலிருந்து மீட்டு அபராதம் விதித்து வருகிறது அந்தக் குழு.
இதுவரை 5.88 மில்லியன் ஹெக்டர் செம்பனை எண்ணெய்த் தோட்டப் பகுதிகளும் 10,257 ஹெக்டர் சுரங்கப் பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பரப்பளவு பெல்ஜியம் நாட்டைவிட கிட்டத்தட்ட இருமடங்கு என்று குறிப்பிட்டார் குழுவின் துணைத் தலைவரும் தலைமைச் சட்ட அதிகாரியுமான சேனிடியார் புர்ஹானுதீன்.
அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்ததற்காக வசூலிக்கப்பட்ட 7.23 டிரில்லியன் ரூப்பியாவை (US$423.18 மில்லியன்) நிதி அமைச்சிடம் அவர் ஒப்படைத்தார். பணிக்குழுவின் நடவடிக்கைகளை விளக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் அந்த ஒப்படைப்பு நடைபெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அதிபர் பிரபோவோ, பணிக்குழுவின் செயல்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். குழுவுடன் ஒத்துழைக்க மறுப்போர் அதிபருக்கு எதிராகச் செயல்படுபவர்களாகக் கருதப்படுவர் என்று அப்போது அவர் எச்சரித்தார்.
“வனப்பகுதிகளைச் சீர்ப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுப்போருக்கு எதிராகச் சட்டத்தைப் பயன்படுத்துமாறும் வழக்குத் தொடுக்குமாறும் தலைமைச் சட்ட அதிகாரிக்கு உத்தரவிடுகிறேன். நாம் எதற்கும் தயங்கவோ பயப்படவோ மாட்டோம்,” என்றார் திரு பிரபோவோ.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக இதுவரை மீட்கப்பட்ட வனச் சொத்துகளின் மதிப்பு கிட்டத்தட்ட US$22 பில்லியன் என்றும் அவர் கூறினார்.

