நியூயார்க் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து; அறுவர் காயம், ஒருவர் கைது

நியூயார்க் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து; அறுவர் காயம், ஒருவர் கைது

1 mins read
b1089a5a-0c8c-4c52-b5b9-a9342182a2c7
தாக்குதல் நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்ட, வீடற்ற மனிதர் என்று நம்பப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற பென் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவல்களை நியூயார்க் மேயர் ஸோரான் மம்டானி எக்ஸ் தளம் வழியாகத் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்ட, வீடற்ற மனிதர் என்று நம்பப்படுகிறது. காயமடைந்த அனைவரும் உயிர்பிழைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்தை ஒரு கொடூரமான வன்முறைச் செயல் என்று மாநில ஆளுநர் கேத்தி ஹோச்சுல் வருணித்துள்ளார்.

நகரில் உள்ள மேடிசன் ஸ்குவேர் கார்டன் மைதானத்தில் என்பிஏ கூடைப்பந்து இறுதிப் ஆட்டமும் அருகில் உள்ள மெட்லைஃப் விளையாட்டரங்கில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களும் அடுத்தடுத்துத் தொடங்க இருக்கின்றன.

பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூடைப்பந்து ஆட்டத்தைக் காண அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேரில் வரவிருப்பதால் நியூயார்க் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 5) நடைபெற்ற என்பிஏ ஆட்டத்தின்போது ரசிகர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார். அதன் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்