டெங்கி பரவலைத் தடுக்க வானூர்தியைப் பயன்படுத்தும் இலங்கை

டெங்கி பரவலைத் தடுக்க வானூர்தியைப் பயன்படுத்தும் இலங்கை

2 mins read
29916bea-f367-46e8-90f8-7a98b44cfff6
இலங்கையின் நீர்கொழும்புவில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனையில் டெங்கி நோயாளியைக் கவனிக்கும் மருத்துவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கொழும்பு: பத்தாண்டுகளில் காணாத டெங்கிப் பரவலைச் சமாளிக்க இலங்கையின் பொதுச் சுகாதாரச் சேவைத் துறையும் மருத்துவமனைகளும் போராடி வருகின்றன.

பரவலைக் கட்டுப்படுத்த ராணுவ உதவியை நாடவேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆயுதப் படையின் ஆளில்லா வானூர்தியை அந்நாட்டின் ஆகாயப் படை பயன்படுத்தத் தொடங்கி உள்ளது.

பருவமழை முடிவுற்றதும் கட்டடங்களின் உச்சியில் தேங்கி நிற்கும் நீரைக் கண்காணிப்பது முதல் கொசுக்களின் பெருக்கத்தைக் கண்டறிவதிலும் வானூர்திகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

வீடுகள், கட்டுமானத் தளங்கள், பள்ளிகள் போன்றவற்றை வானூர்தி மூலம் கண்காணித்து, கொசுக்களைப் பெருகவிடாமல் தடுப்பது எப்படி என்பது குறித்துப் பிரசாரம் செய்யும் பணியில் ராணுவத்தினரும் காவல்துறையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இவ்வாண்டு தொடங்கியது முதல் இதுவரை டெங்கியால் 53 பேர் இறந்துவிட்டனர். மேலும், 76,044 பேர் டெங்கித் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்னர், 2017ஆம் ஆண்டு டெங்கி நோயாளிகளின் எண்ணிக்கை 100,000க்கும் மேல் அதிகரித்த பின்னர் தற்போதை எண்ணிக்கை அதனை நெருங்கி வருகிறது.

டெங்கிப் பரவல் மோசமாகி வருவது குறித்து லலிந்திரா டயஸ் என்னும் மருத்துவ ஆலோசகர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு நகரில் அவர் பேசும்போது, டெங்கி நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது மருத்துவர்களுக்குச் சவாலை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

திடீரென்று அதிகமான டெங்கி நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தாம் பணிபுரியும் பொது மருத்துவமனையில் ஜூன் தொடங்கி இதுவரை 1,800 நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த டெங்கி நோயாளிகளைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை 1,050 அதிகம் என்றார் அவர்.

நிலவரத்தை விளக்கிய சுகாதாரத் துறை அதிகாரிகள், “ஜூலை முதல் வாரத்தில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,000க்கு அதிகரித்ததைத் தொடர்ந்து மருத்துவர்களும் தாதியரும் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்றனர்.

மேலும், “மருத்துவமனைகளில் அதிகமான படுக்கைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. சாதாரண வார்டுகள் டெங்கி நோயாளிகளுக்கான வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன,” என்றும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்