நியூயார்க்: இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு இரண்டு டிரில்லியன் டாலரைத் (2.5 டிரில்லியன் வெள்ளி) தாண்டியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ், முதன்முறையாக அதன் பங்குகளைப் பொதுமக்கள் வாங்கத் திறந்துவிட்டதைத் (ஐபிஓ) தொடர்ந்து அதன் மதிப்பு பெரிய அளவில் கூடியது. திரு மஸ்க்கின் நிறுவனம் வழங்கும் ஏவூர்திகள், இணையச் சேவை, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஆகியவற்றில் தாங்களும் உரிமை வகிக்க மக்கள் பங்குகளை வாங்கினர்.
ஸ்பேஸ்எக்சின் ஐபிஓ வெளியீடு பலர் எதிர்பார்த்ததைவிட சீராகச் சென்றது. வெள்ளிக்கிழமை (ஜூன் 12) ஸ்பேஸ்எக்சின் பங்குகள் பொதுமக்கள் வாங்கத் திறந்துவிடப்பட்டன. அன்றைய நாள் முடியும்போது அந்நிறுவனத்தின் பங்கு விலை 19 விழுக்காடு கூடி 161 டாலராக இருந்தது.
ஸ்பேஸ்எக்ஸ், அமெரிக்காவின் ஆறாவது ஆகப் பெரிய நிறுவனமாகும். அந்நிறுவனம் ஐபிஓ வெளியீடு, உலகின் முதல் டிரில்லியனேர் செல்வந்தராக திரு மஸ்க்கை உருவெடுக்க வகைசெய்தது.
ஸ்பேஸ்எக்ஸ், சென்ற ஆண்டு கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டாலரை இழந்தது. அதோடு, இதர பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈட்டிய வருவாயில் சிறு பங்கை மட்டுமே அது ஈட்டியது.
அப்படியிருந்தும் அதன் பங்குகளுக்குப் பொதுமக்களிடையே இருக்கும் வரவேற்பு பாதிக்கப்படவில்லை.

