வெளிநாடுகளில் பிள்ளைத் தத்தெடுப்பில் முறைகேடு; மன்னிப்பு கேட்ட தென்கொரிய அதிபர்

1 mins read
a27fd46f-b84b-46fc-b331-8d2265e09090
1970களிலும் 1980களிலும் தென்கொரியப் பொருளியல் வேகமாக வளரத் தொடங்கியபோது, வெளிநாடுகளில் தென்கொரியப் பிள்ளைகள் தத்தெடுக்கப்பட்ட முறை ஒரு லாபகரமான தொழிலாக மாறியது. - படம்: இணையம்

கடந்த பத்தாண்டுகளாக வெளிநாடுகளில் தென்கொரியப் பிள்ளைகளைத் தத்தெடுப்பதில் அரசாங்க முறைகேடு நடந்ததற்காக தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு நியாயமற்ற மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டதை அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 2) ஒப்புக்கொண்டார்.

1955 முதல் 1999 வரை 140,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கொரியப் போருக்குப் பிறகு பிறந்த கலப்பின குழந்தைகளை, ஒரே இனத்துக்கு முன்னுரிமை தரும் சமூகத்திலிருந்து அகற்றுவதே இந்தத் தத்தெடுப்பின் நோக்கம்.

2025ல் நடைபெற்ற அதிகாரபூர்வ விசாரணை, ஆவணங்களைப் பொய்ப்பித்தது, அடையாளங்களை மாற்றியது, பிள்ளைகளைத் தத்தெடுப்போரின் பின்னணியைச் சரிபார்ப்பதில் குறைபாடு நிலவியது போன்ற மோசடியான நடைமுறைகளுக்கு அரசாங்கம் பொறுப்பானதாகக் கண்டறிந்தது.

பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர்களிடமிருந்து சட்டபூர்வமான ஒப்புதலை முறையாகப் பெறாத வழக்குகளும் இருந்ததாகக் கண்டறிந்த உண்மையறியும் சமரச ஆணையம், இதற்காக மன்னிப்பு கோருமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியது.

1970களிலும் 1980களிலும் தென்கொரியப் பொருளியல் வேகமாக வளரத் தொடங்கியபோது, வெளிநாடுகளில் தென்கொரியப் பிள்ளைகள் தத்தெடுக்கப்பட்ட முறை ஒரு லாபகரமான தொழிலாக மாறியது.

2020களிலும் ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து அனுப்பப்படுகின்றனர். பெரும்பாலும், சமூகத்தில் ஒதுக்கப்படும் மணமாகாத பெண்களின் பிள்ளைகள் இந்தக் கணக்கில் அதிகமாக உள்ளனர்.

தத்தெடுக்கப்பட்டவர்களிடமும் அவர்களது குடும்பங்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அதிபர் லீ, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

குறிப்புச் சொற்கள்