தென்கொரிய முன்னாள் அதிபர் யூனுக்கு ஆயுள் தண்டனை

தென்கொரிய முன்னாள் அதிபர் யூனுக்கு ஆயுள் தண்டனை

2 mins read
6b1f5165-8f66-4049-93d8-9fcf4f319199
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல். - கோப்புப்படம்: இபிஏ
multi-img1 of 2

சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டை ராணுவ ஆட்சியின்கீழ் கொண்டுவர முயன்றதன் தொடர்பில் அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சோல் மத்திய வட்டார நீதிமன்றம் அந்தத் தண்டனையை விதித்தது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த யூன் மேற்கொண்ட முயற்சி, நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. தென்கொரியாவின் ஜனநாயகக் கட்டமைப்புகளின் மீள்திறனையும் அது சோதித்துப் பார்த்தது.

ஜனவரியில் அரசாங்க வழக்கறிஞர்கள், யூனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அவரின் அவசரகால ராணுவச் சட்டம், நாடாளுமன்றச் செயல்பாட்டையும் தேர்தல் ஆணையத்தையும் கீழறுத்ததாக வழக்கறிஞர்கள் கூறினர்.

தென்கொரியச் சட்டப்படி, கிளர்ச்சியைத் தூண்டிவிடுபவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

இதற்கு முன்னர் தென்கொரியாவில் 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும், 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

தீர்ப்பை எதிர்த்து யூன் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் அவருக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அதை எதிர்த்தும் அவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

பிப்ரவரி 12ஆம் தேதி, தென்கொரியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் லீ சாங் மின்னுக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

யூன் ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதே போன்ற குற்றச்சாட்டுக்காக, முன்னாள் பிரதமர் ஹான் டக் சூவுக்கு ஜனவரி மாதம் 21ஆம் தேதி, 23 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ராணுவச் சட்டத்தை அறிவித்ததன் தொடர்பில் யூனின் அமைச்சரவையில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் இரண்டு அமைச்சர்கள் லீயும் ஹானுமே.

யூன் எட்டு வழக்குகளை எதிர்கொள்கிறார். அவை தவிர இன்னொரு வழக்கில், அவருக்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைதுசெய்ய வந்த அதிகாரிகளை யூன் தடுக்க முனைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அந்த வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக ஏற்கெனவே யூன் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்