மஸ்ஜித் இந்தியா பகுதியில் மீண்டும் தோன்றிய புதைகுழி

மஸ்ஜித் இந்தியா பகுதியில் மீண்டும் தோன்றிய புதைகுழி

2 mins read
956983a0-8cb4-4e01-a47e-b3990dd89703
பாம்பே ஜுவல்லரி நகைக்கடையின் முகப்பில் அந்தப் புதைகுழி தோன்றியது. அதனைப் பொதுமக்கள் பார்வையிடுகின்றனர். - படம்: தி ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் மீண்டும் ஒரு புதைகுழி தோன்றியுள்ளது. அது பாம்பே ஜுவல்லரி நகைக்கடையின் முகப்பில் காலை 8.40 மணிக்கு தோன்றியதாக கோலாலம்பூர் நகர மன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 10) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அதே ஜாலான் மஸ்ஜித் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று காலை ஓர் இந்திய சுற்றுப்பயணியான திருவாட்டி விஜயலெட்சுமியை விழுங்கிய புதைகுழி பயங்கரத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

நகர மன்றம், சிலாங்கூர் தண்ணீர் அமைப்பு, ‘இண்டா’ தண்ணீர் குழுமம், டாங் வாங்கி வட்டாரக் காவல்துறை ஆகியவை சம்பவ இடத்தில் சோதனைகள் நடத்திவருகின்றன.

பாதுகாப்பைக் கருதி, ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதி அனைத்து போக்குவரத்துக்கும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. லோரோங் மஸ்ஜித் இந்தியா 4 சாலை முதல் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதி வரை போக்குவரத்துத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு தலையாயது என்று வலியுறுத்தியுள்ள நகர மன்றம், தொழில்நுட்ப மதிப்பீடுகள், கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் நடந்துவருவதால் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.

பிரதமர் அலுவலக (கூட்டரசு பிரதேசம்) அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா இரண்டு வாரங்களுக்கு முன்புதான் (அக்டோபர் 24) கடந்த ஆண்டு நடந்த புதைகுழி சம்பவத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

அதற்கான விசாரணைக்கு அமர்த்தப்பட்ட சிறப்புப் பணிக்குழுவின் முடிவுகளை அவர் அப்போது வெளியிட்டார். மண்ணின் உறுதியற்ற தன்மையால் மோசமடைந்து பலவீனமான கழிவுநீர்க் குழாய்கள் புதைகுழி ஏற்படக் காரணங்களாக அமைந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

‘கென்னி ஹில்ஸ்’ எனப்படும் ஒருவகை இயற்கை குன்றுத் தொடரின் மேல் ஜாலான் மஸ்ஜித் வட்டாரம் அமைந்துள்ளது. அதற்கு அடியில் அதிக வெப்பத்தால் உருமாறும் ‘ஷிஸ்ட்’ (schist rock) என்று அழைக்கப்படும் பாறைகள் உள்ளன.

ஆகவேதான், சுமார் 60 முதல் 70 மீட்டர் ஆழத்தில் பூமியில் தோன்றக்கூடிய சுண்ணாம்புக் கற்கள் ஒரு நேரடிக் காரணம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. பிறகு அது விசாரணையில் நிராகரிக்கப்பட்டது என்பதை அமைச்சர் சலேஹா விளக்கினார்.

விசாரணையின் முழு அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டுவிட்டது எனவும் கோலாலம்பூர் நகர மன்றத்தின் பொது அறிக்கை ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
புதைகுழிமலேசியாகோலாலம்பூர்