சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங், ஜப்பானியத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற அந்நாட்டுப் பிரதமர் சானே தக்காய்ச்சிக்கு வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்.
தேர்தல் வெற்றி, திருவாட்டி தக்காய்ச்சியின் தலைமைத்துவத்திற்கு ஜப்பானிய மக்கள் அளித்துள்ள தெளிவான அங்கீகாரம் என்றார் அவர்.
ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் வோங் அவ்வாறு தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் வலுவான, பன்முகத்தன்மை கொண்ட உறவை அவர் சுட்டினார். இருதரப்பும் அரசதந்திர உறவுகளைத் தொடங்கி இவ்வாண்டுடன் (2026) 60 ஆண்டு நிறைவுறுவதைத் திரு வோங் குறிப்பிட்டுச் சொன்னார். சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குத் திருவாட்டி தக்காய்ச்சியுடன் சேர்ந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார்.
பாரம்பரியத் துறைகளில் புதிதாக உருவெடுத்துவரும் பசுமை, மின்னிலக்கமயமாதல் திட்டங்களில் இருதரப்பும் ஒத்துழைக்கலாம் என்றார் திரு வோங். வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரும் ஜப்பானும் விதிமுறைகள் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறை, பன்முகத்தன்மை, தடையற்ற வர்த்தகம் முதலியவற்றைக் கட்டிக்காக்கக் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் பிரதமர் வோங் தெரிவித்தார்.
ஆசியான்-ஜப்பான் உரையாடலை 2027ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் ஒருங்கிணைக்கிறது. அந்த அடிப்படையில், ஆசியானுடன் கொண்டுள்ள உறவை ஜப்பான் விரிவுபடுத்த வேண்டும் என்று சிங்கப்பூர் விரும்புவதாக அவர் சொன்னார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜப்பானியத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காகப் பிரதமர் தக்காய்ச்சியைப் பாராட்டியிருக்கிறார். வலிமையான திட்டங்களின் மூலம் பழைமைவாதத்தையும் அமைதியையும் நிலைநாட்ட விரும்பும் அவருக்குப் பெரும் வெற்றி கிடைக்கத் திரு டிரம்ப் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“திருவாட்டி தக்காய்ச்சி பெரிதும் மதிக்கத்தக்க, மிகவும் புகழ்பெற்ற தலைவர். திடீர்த் தேர்தலை அறிவிக்க அவர் எடுத்த துணிச்சலான, விவேகமான முடிவு, நல்ல பலன் தந்துள்ளது,” என்று அமெரிக்க அதிபர், சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பானியப் பிரதமரின் அமோக வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“உலக அமைதி, நிலைத்தன்மை, வளப்பம் முதலியவற்றை மேம்படுத்துவதில் இந்திய-ஜப்பானியச் சிறப்புப் பங்காளித்துவத்திற்கு முக்கியப் பங்குண்டு. திருவாட்டி தக்காய்ச்சியின் ஆற்றல் மிகுந்த தலைமைத்துவத்தின்கீழ், இருநாட்டு உறவை மேலும் நல்ல நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும்,” என்றார் திரு மோடி.

