மலேசியக் காவல்துறை தளபதிமீது துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது

மலேசியக் காவல்துறை தளபதிமீது துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது

2 mins read
c52f2b6f-76f7-4fa0-877b-5dd136507ffd
புக்கிட் காயு ஹித்தாமில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் தளபதி நசருதீன் நசீர் ஓட்டிச் சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்த விசாரணை தொடர்கிறது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: புக்கிட் காயு ஹித்தாமில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தளபதி நசருதீன் நசீர் ஓட்டிச் சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படுபவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள்ளாகவே சந்தேப் பேர்வழி கைதுசெய்யப்பட்டதாகவும் விசாரணை தொடர்வதாகவும் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்ற அவர், எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி ஜைலா யூசோஃப் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்று உறுதியளித்தார்.

மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகே புதன்கிழமை (பிப்ரவரி 25) அதிகாலை நடந்த தாக்குதலில் நசருதீன் காயமின்றித் தப்பினார்.

பள்ளிவாசலுக்கு அவர் சென்றுகொண்டிருந்தபோது, கறுப்பு நிற உடையும் முகத்தை மறைக்கும் தலைக்கவசமும் அணிந்தபடி மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் அவரது காரை அணுகியதாக கெடா காவல்துறைத் தலைவர் அட்ஜ்லி அபு ஷா கூறினார்.

கெடா காவல்துறைத் தலைவர் அட்ஜ்லி அபு ஷா.
கெடா காவல்துறைத் தலைவர் அட்ஜ்லி அபு ஷா. - படம்: பெர்னாமா

“சந்தேக நபர்களில் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதால் காரின் பின்புற வலக்கதவும் முன்புறப் பயணிக் கதவும் தாக்கப்பட்டன. சுட்டவர் பகுதி தானியக்க ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக நம்புகிறோம். தோட்டாக்களின் சிதைந்த துண்டுகளைக் கண்டோம்,” என்று புதன்கிழமை அவர் கூறினார்.

நகர்ந்த வாகனத்தை நோக்கி, கிட்டத்தட்ட 1 மீட்டர் தூரத்திலிருந்து இருமுறை துப்பாக்கியால் சுட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஎல்லைதுப்பாக்கிச் சூடுதளபதிவிசாரணைஉள்துறை அமைச்சு