ரோட் தீவில் துப்பாக்கிச் சூடு; மூவர் மரணம்

ரோட் தீவில் துப்பாக்கிச் சூடு; மூவர் மரணம்

2 mins read
6caa51ae-ffd4-43f7-a200-d8805dd322db
ரோட் தீவின் ‘போட்டக்கட்’ பகுதியில் காவல்துறையினர். - படம்: ஏஎஃப்பி

ரோட் தீவு: ரோட் தீவின் ‘போட்டக்கட்’ பகுதியில் உள்ள பனிச்சறுக்குக் கூடம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அந்தக் கூடத்தில், திங்கட்கிழமை (பிப்ரவரி 16) உயர்நிலைப் பள்ளி ஹாக்கி விளையாட்டுப் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, அச்சம்பவம் நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உட்பட மூவர் மாண்டனர்.

சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3.30 மணி அளவில் ‘டெனிஸ் எம். லின்ச்’ கூடத்தில் நடந்த அந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மேலும் மூவர் கடுமையாகக் காயமுற்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. இருப்பினும், அது குடும்பத் தகராறு காரணமாக நடந்திருக்கலாம் என்று ‘போட்டக்கட்’ காவல்துறையின் தலைவர் டீனா கொன்காவ்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அது குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு சம்பவம் என்றார் அவர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் குறித்தோ மாண்டவர்களின் வயது பற்றியோ எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், கொல்லப்பட்ட மற்ற இருவர் பெரியவர்களாகத் தெரிவதாக அவர் சொன்னார்.

பிப்ரவரி 16ஆம் தேதி போட்டியிட்ட இரண்டு குழுக்களும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள்.

“அவர்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். அவர்கள் விளையாடுவதைக் கண்டு அவர்களின் குடும்பத்தார் ரசித்துக்கொண்டிருந்தனர். அந்த மகிழ்ச்சியான நேரம் இப்படி மாறிவிட்டது. அதனால், அது நிச்சயம் வேதனைக்குரியது”, என்றார் ‘போட்டக்கட்’ மேயர்.

துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பிய மாணவர்களுக்கு ஆலோசனைச் சேவைகளை வழங்க, பள்ளிகளுடன் இணைந்து செயல்படப்போவதாகச் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர்.

விளையாட்டு நடந்துகொண்டிருந்தபோது, திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை காணொளி ஒன்று காட்டியது.

பனிச்சறுக்குக் கூடத்தில் இருந்த ஹாக்கிக் குழுவில் இடம்பெற்ற அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்