பினாங்கில் தொடர் கொள்ளை; இந்தோனீசியர் 11 பேர் கைது

பினாங்கில் தொடர் கொள்ளை; இந்தோனீசியர் 11 பேர் கைது

1 mins read
81722d16-f4a7-41fb-ab22-6d665f2e0cf0
கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் பெண்கள். - மாதிரிப்படம்: பிக்சாபே

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பினாங்கில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த ஐந்து சம்பவங்கள் தொடர்பில் பெண்கள் இருவர் உட்பட இந்தோனீசியர்கள் 11 பேரை ஒரு வார காலத்திற்குத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள்.

ஆயுதங்களுடன் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397 பிரிவுகளின்கீழ் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, நீதிபதி நூருல் அய்னா அகமது அவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகப் பேர்வழிகளில் மூவர் சுங்கை பாக்காப்பிலும், மேலும் மூவர் சிம்பாங் அம்பாங்கிலும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. எஞ்சிய ஐவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அதிகாலை 12.40 மணியளவில் பேராக் மாநிலத்தின் ஈப்போவில் பிடிபட்டதாக ‘உத்துசான் மலேசியா’ செய்தி தெரிவித்தது.

வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஒரு கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. கத்திகள், அரிவாள்களுடன் முகமூடி அணிந்திருந்த ஆறு பேர், வெளிநாட்டு ஊழியர் ஒருவரை மிரட்டி, அவரது கை கால்களைக் கயிறுகளால் கட்டிப்போட்டனர்.

தம்மிடமிருந்து கைப்பேசி, தங்க நகைகள், 7,190 ரிங்கிட் ரொக்கம் உட்பட மொத்தம் 35,000 ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புடைய பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்