புருணை சுல்தானின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் மூத்த அமைச்சர் லீ

புருணை சுல்தானின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் மூத்த அமைச்சர் லீ

2 mins read
acc444e3-507d-4cf4-892c-ff35832b27fd
ஜூலை 14ஆம் தேதி, புருணை அனைத்துலக விமான நிலையம் சென்று சேர்ந்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (இடது), புருணையின் பிரதமர் அலுவலக அமைச்சர் சுஃபியன் சப்துவுடன் உரையாடினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் 80வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள, மூத்த அமைச்சர் லீ சியன் லூங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) முதல் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வரை அந்நாட்டுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.

சிங்கப்பூர் தலைவர்கள் சுல்தான் போல்கியாவுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மூத்த அமைச்சர் லீ இப்பயணத்தின் போது சுல்தான் போல்கியாவையும் அரசகுடும்பத்தினரையும் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், புருணையில் பயிற்சி பெற்று வரும் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களையும் அவர் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

திரு லீயுடன் அவரது மனைவியும் உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணையமைச்சர் கோ பெய் மிங் ஆகியோரும் புருணைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, சுல்தான் போல்கியாவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்தினம், புருணையின் நவீனமயமாக்கலுக்கான சுல்தானின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டியுள்ளார். சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையே நிலவும் ‘சிறப்புமிக்க நீடித்த உறவுக்கு’ சுல்தானின் உறுதியான ஆதரவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் லாரன்ஸ் வோங் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 1984ஆம் ஆண்டில் புருணை சுதந்திரம் பெற்றது முதல் உலகளாவிய சவால்களை சுல்தான் போல்கியா திறம்படக் கையாண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான தற்காப்பு மற்றும் நாணயப் பரிமாற்ற உடன்பாடுகள் இருதரப்பு உறவின் அடித்தளமாக விளங்குவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மூத்த அமைச்சர் லீ மற்றும் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரும் தங்களது வாழ்த்துக் கடிதங்களில் இருநாட்டுத் தலைவர்களின் அடுத்த தலைமுறையும் இந்த ஆழமான நட்புறவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்