அமெரிக்கத் தலைமையில் ஜெனீவாவில் ரஷ்யா, உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை

அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது: ஸெலன்ஸ்கி

அமெரிக்கத் தலைமையில் ஜெனீவாவில் ரஷ்யா, உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தை

2 mins read
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா உக்ரேனில் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது
53ffb923-1aed-45be-b12a-f1945856b295
அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய, அமெரிக்க, உக்ரேனிய பேராளர்கள். - படம்: X/@RUSTEM_UMEROV
multi-img1 of 2

ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ரஷ்யாவும் உக்ரேனும் அமெரிக்கா தலைமையில் இருநாள் அமைதிப்பேச்சுவார்த்தையை புதன்கிழமை (பிப்ரவரி 18) நிறைவுசெய்துள்ளனர்.

எனினும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்துவரும் மிகப் பெரிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்தத் தரப்பும் கோடிகாட்டவில்லை.

செவ்வாயன்று நடந்த ஆறு மணி நேர கூட்டத்தைவிட, மிகக் குறைவாக, இரண்டு மணி நேரத்தில் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக ரஷ்யப் பேராளர் குழு கூறியது.

பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற அம்சங்கள் குறித்து எத்தரப்பும் விவரிக்கவில்லை.

நான்கு ஆண்டுகளாக தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரேனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா, உக்ரேனில் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அதனால் உக்ரேனிய தென் பகுதியில் உள்ள துறைமுக நகரான ஒடெசாவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

அங்கு பல்லாயிரக்கணக்கானோர் தண்ணீர் விநியோகம் இல்லாமல் வாடுவதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இருந்து தாம் அறிக்கைகளுக்குக் காத்திருப்பதாகவும், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உக்ரேன் தயாராக இருப்பதாகவும் உக்ரேனிய அதிபர் நாட்டு மக்களுக்கு அளித்த அன்றாட இரவு உரையில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேனியத் தலைமை அமைதிப் பேச்சாளர் ருஸ்டம் உமரோவ், நடைமுறை பிரச்சினைகளையும் சாத்தியப்படும் முடிவுகளுக்கான வரையறைகளையும் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறினார். உக்ரேனின் தேசியப் பாதுகாப்பு, தற்காப்பு மன்றத்தின் தலைவரான அவர் மேல் விவரங்களை வழங்கவில்லை.

இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அபுதாபியில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கைதிகள் பரிமாற்றத்தைத் தவிர முக்கிய முடிவுகள் எட்டப்படவில்லை.

ஐரோப்பாவில் 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்துவரும் மிகப் பெரிய போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் அமைதி ஒப்பந்தம் ஏற்பட உக்ரேன் அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

அதிக எதிர்பார்ப்புகள் இன்றியே உக்ரேனிய பேச்சாளர்கள் செயல்படுவதாக அக்குழுவின் தலைவர் ருஸ்டம் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே கூறியிருந்தார்.

ஜெனீவாவில் ஓமானின் சமரசப் பேச்சாளர்கள் தலைமையில் ஈரானிய அதிகாரிகளுடன் காலையில் அணுவாயுத பிரச்சினை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்யா உக்ரேன் சந்திப்பிலும் அமெரிக்கா கலந்துகொண்டுள்ளது.

அமைதிப் பேச்சுகளுக்கான அமெரிக்கப் பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்கோவும் ஜாரட் குஷ்நரும் இரு கூட்டங்களிலும் இருந்துள்ளனர்.

இதற்கிடையே பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர், செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ரஷ்ய உக்ரேன் அமைதிப் பேச்சுகள் பற்றியும் ஈரான் அணுவாயுத நிலவரம் குறித்தும் உரையாடியுள்ளார். மனித நேய உதவிகள் காஸாவை அடைவதற்கான முக்கியத்துவத்தையும் அவர் திரு டிரம்ப்பிடம் குறிப்பிட்டுள்ளார்.

அமைதிப் பேச்சுகளுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீவ் விட்கோவ் ரஷ்ய உக்ரேன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைக்கு முன்பாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்