போர், வறட்சியால் ஆசியாவில் அரிசி விலை 20% உயர்வு

போர், வறட்சியால் ஆசியாவில் அரிசி விலை 20% உயர்வு

2 mins read
8eb150aa-0c07-483b-ad4d-586941a8b912
ஆசியாவில் அரிசி விலை 20 விழுக்காடு உயர்ந்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் எல் நினோ போன்ற கடுமையான வானிலை மாற்றங்கள் காரணமாக, நடப்பு மே மாதத்தில் ஆசியச் சந்தையில் அரிசி விலை 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. 

இது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் உலகம் கண்டிராத மிகப் பெரிய மாதாந்தர விலை உயர்வாகும்.

ஆசிய அரிசி விலையின் முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் தாய்லாந்து வெள்ளை அரிசியின் விலை இந்த மாதத்தில் மட்டும் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

அதேபோல், சிகாகோ வர்த்தக வாரியத்தின் அரிசி வர்த்தக விலை முன்னுரைப்பும் 15 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது.

விலை உயர்வுக்கான பின்னணி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல், போக்குவரத்துத் தடைகள் காரணமாக, எரிபொருள் உரங்களின் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

அரிசி உற்பத்திக்குத் தேவையான நீர்ப்பாசன இயந்திரக் குழாய்களை இயக்க டீசல் எரிபொருள் மிகவும் முக்கியமானது. அவ்வகையில் எரிபொருள் விலை உயர்வு அரிசி உற்பத்தியில் கடும் சவாலுக்கு வித்திட்டுள்ளது.

தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் நைட்ரஜன் உரங்களின் விலை, இந்த ஆண்டு 40 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாகவும் அனைத்துலக அரிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு அவற்றுடன் கடுமையான வெப்பநிலை காரணமாக வியட்நாம், தாய்லாந்து போன்ற முக்கிய ஏற்றுமதி நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் செய்வதைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டு வருகின்றனர்.

மேலும், வரவிருக்கும் ‘எல் நினோ’ பருவநிலை தாக்கத்தால் ஆசியாவின் முக்கியப் பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, அரிசி உற்பத்தி மேலும் குறையக்கூடும் என பிலிப்பீன்ஸ் எச்சரித்துள்ளது.

அந்நாட்டின் அரிசி உற்பத்தி இதனால் 3.5 விழுக்காடு வரை குறையக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்