மலேசியர்களாக ஒற்றுமை, பரஸ்பர மரியாதைக்கு முன்னுரிமை அளிக்கவும்: அன்வார்

மலேசியர்களாக ஒற்றுமை, பரஸ்பர மரியாதைக்கு முன்னுரிமை அளிக்கவும்: அன்வார்

2 mins read
f34ded79-57ea-48a0-967b-6b9b7520ddea
மலேசியர்களாக ஒற்றுமை, பரஸ்பர மரியாதை உணர்விற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மலேசியர்களிடமும் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: தீவிர இனவெறியையும் வெறுப்பு அரசியலையும் கைவிட்டு, மலேசியர்களாக ஒற்றுமை, பரஸ்பர மரியாதை என்ற உணர்விற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மலேசியர்களிடமும் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்) கூட்டணித் தலைவருமான திரு அன்வார், தமது தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு சமூகத்தின் நலன்களையும் புறக்கணிக்காமல், அனைத்து இனங்களுக்கும் நியாயமான கொள்கைகளைச் செயல்படுத்துவதாகக் கூறினார்.

“அனைத்துக் குடிமக்களும் தீவிர இனவெறியை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் ஏன் நண்பர்களாக, சகோதர சகோதரிகளாகப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது?

“நாம் ஏன் மலேசியர்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து செயல்படக் கூடாது? நாம் ஏன் இவ்வளவு வெறுப்பைக் காட்ட வேண்டும்,” என்று அவர், வியாழக்கிழமை (ஜூலை 9) இரவு தமான் பெலாங்கி இண்டா பொது மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார உரையின்போது கூறினார்.

மடானி அரசாங்கம் சீன சமூகத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளையும் பிரதமர் மறுத்தார். மேலும், அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு கொள்கையும் ஒட்டுமொத்த நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.

நிதி அமைச்சருமான திரு அன்வார், குறு, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு உதவி இனரீதியானது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, இத்துறைதான் தேசியப் பொருளியலின் முக்கிய முதுகெலும்பு என்றும் வலியுறுத்தினார்.

“நாம் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும்போது, ​​அது சீனர்களுக்கு மட்டுமே என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இந்த நிறுவனங்கள் தேசியப் பொருளியலுக்குப் பங்களிக்கின்றன. மேலும், இவற்றில் பணிபுரியும் பெரும்பான்மையானவர்கள் மலாய்க்காரர்கள். மலாய்க்காரர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு உதவி தேவைப்பட்டால், நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். இதனால்தான் நாங்கள் எங்கள் பூமிபுத்ரா செயல்திட்டத்தைத் தொடர்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்திய சமூகம் குறித்துப் பேசிய அவர், அச்சமூகத்தினருக்கான வாய்ப்புகளையும் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துவதற்கு, இன்னும் நிறைய முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதாக பெர்னாமா தெரிவித்தது.

எந்தவோர் இனத்தையும் நடத்துவதில் அரசாங்கம் பாகுபாடு காட்டுகிறது என்ற தோற்றத்தை உருவாக்கும் அளவிற்குக் கல்வி தொடர்பான பிரச்சினைகளை அரசியல்மயமாக்கக் கூடாது என்றும் பிரதமர் நினைவூட்டினார்.

குறிப்புச் சொற்கள்
அன்வார்அரசாங்கம்பாகுபாடு