கணவருடன் சீனப் பாரம்பரியத்தில் திளைக்கும் புஷ்பராணி

கணவருடன் சீனப் பாரம்பரியத்தில் திளைக்கும் புஷ்பராணி

3 mins read
2d525b83-9337-4161-bc61-a4c9680b9e22
கணவர் லியோங் யீ ஃபூவுடன் புஷ்பராணி கிருஷ்ணன். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

பத்து கேவ்ஸ்: நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை இனத்தவரான சீனர்கள், பாம்பு ஆண்டுக்கு விடை கொடுத்து இயக்கம், ஆற்றல், விசுவாசம், வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் குதிரை ஆண்டை இவ்வாண்டு உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

சிவப்பு வண்ண விளக்குகள், அலங்காரங்கள், வீட்டு வாசலில் மாண்டரின் ஆரஞ்சுப் பழ மரம், கைநிறைய ‘அங்-பாவ்’ உறைகள் என்று சீனர்களின் வீடுகள் இந்நாளில் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். 

அதே களிப்பில் திளைத்துள்ள பத்து கேவ்ஸ், கம்போங் லக்சமணாவைச் சேர்ந்த புஷ்பராணி கிருஷ்ணன், சீனரான லியோங் யீ ஃபூவைத் திருமணம் புரிந்தது முதல், கடந்த 13 ஆண்டுகளாகத் தீபாவளியைப் போன்று சீனப் புத்தாண்டையும் அதன் கலாசாரம் மாறாது குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். 

சீனப் புத்தாண்டிற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே வீடுகளில் வண்ணச் சாயங்கள் பூசி, பெருநாள் அலங்காரங்களைத் தொங்கவிடுவோம் என்று புஷ்பராணி கூறினார்.

சீனப் புத்தாண்டை வரவேற்க முதல் அம்சமே ஆரஞ்சுப் பழங்களின் அலங்காரங்கள் என்று அவர் விவரித்தார். 

அதன் பின்னர், புத்தாண்டின் முதல் நாளில் குடும்ப முன்னோர்களின் ஆசியை  பெறும் வகையில் அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படும் என்றார் அவர். 

தன் வாழ்நாளில் தீபாவளியை மட்டுமே கொண்டாடி வந்த தமக்கு திருமணத்திற்குப் பின்னர் கணவரின் இல்லத்தில் முதல் முறையாகச் சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய அனுபவம் மறக்க முடியாது என்று புஷ்பராணி குறிப்பிட்டார். 

அங்கு தாம் கற்றுக் கொண்ட அனைத்து மரபினையும் பின்பற்றி கடந்த 13 ஆண்டுகளாகச் சீனப் புத்தாண்டைக் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்வதாகப் புஷ்பராணி கூறினார்.

சீனர்களின் கலாசாரத்தில் வேர்க்கடலைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதால், அது சார்ந்த பலாகாரங்களையே அவர்கள் அதிகம் விரும்புவதாகப் புஷ்பராணி தெரிவித்தார்.

சீன மொழி தமக்கு நன்றாகப் புரிந்தாலும், இன்னும் சரளமாகப் பேசக் கற்றுக் கொள்ளவில்லை என்று கூறிய புஷ்பராணி, ஆனால் தம்மிரு பிள்ளைகளும் அவ்விரு மொழியுடன் சேர்ந்த மலாய், ஆங்கிலத்தையும் சரளமாகப் பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மக்கான் பெசார் (Makan Besar) எனப்படும், ஆண்டுக்கு ஒருமுறை சொந்தங்கள் அனைத்தும் ஒன்றாகக் கூடி உணவருந்தும் அந்த முறை இவ்வாண்டு செய்ய முடியாதது வருத்தமளிப்பதாக லியோங் யீ ஃபூ தெரிவித்தார்.

“நாங்கள் அம்மா வீட்டிற்குச் சென்றால் அங்கு உடன்பிறப்புகளுடன் கூடிக் களிப்புற்று உணவு உண்போம். அவித்த மீன், கோழி உள்ளிட்ட பல வகைப் பாரம்பரிய உணவுகளைத் தயார் செய்யப்படும். எல்லாரும் மகிழ்ச்சியோடு இருப்போம். இம்முறை கிராமத்திற்குச் செல்லவில்லை. காரணம் பெற்றோர் காலமாகிவிட்டனர். எனவே நாங்கள் இங்குதான் பெருநாள் கொண்டாடுவோம்,” என்றார் அவர்.

வழக்கம் போல இவ்வாண்டு சீனப் புத்தாண்டிலும் தங்களுக்கு நிறைய அங் பாவ் கிடைத்ததாகப் புஷ்பாராணியின் பிள்ளைகளான லியோங் வென் ஸிஎன்ற சாய் மீராவும் லியோங் ஜியா ஸுன் என்ற காசுனும் தெரிவித்தனர். 

தொடக்கத்தில், இப்பெருநாள் குறித்து தமக்கு ஒன்றும் தெரியாது என்றாலும் மகளை மணம் முடித்து கொடுத்தது முதல் தாமும் சம்பந்தி வீட்டாருடன் இணைந்து அவர்களின் கலாசாரத்தைப் பின்பற்றி இப்பெருநாளைக் கொண்டாடுவதாக புஷ்பாவின் தந்தையான 69 வயதுடைய கிருஷ்ணன் சகாதேவன் தெரிவித்தார் என பெர்னாமா செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்