பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிலுள்ள பேரங்காடிகளில் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு போகும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்வதாக த ஸ்டார் இணையச் செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக, கடைகளுக்கு அருகே வசிப்போர் பொருள்களை வாங்கிய பின்னர் அந்தப் பொருள்களோடு வீட்டுக்குத் தள்ளுவண்டியைக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.
அதனால், மொத்தக் கடைகளுக்கும் சில்லறைக் கடைகளுக்கும் ஏற்படும் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மலேசியா முழுவதும் ஏராளமான கிளைகளைப் பரப்பி இருக்கும் மொத்த மற்றும் சில்லறைக் கடைளை நடத்தும் மைதின் முஹம்மது நிறுவனத்துக்கு அதனால் பேரிழப்பு ஏற்படுவதாக அதன் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைதின் கூறினார்.
ஒவ்வொரு தள்ளுவண்டியும் ஏறத்தாழ 500 ரிங்கிட் மதிப்புள்ளது என்றார் அவர்.
தமது நிறுவனத்தின் 76 கிளைகளில் களவுபோகும் தள்ளுவண்டிகளால் ஆண்டுதோறும் 500,000 ரிங்கிட் (S$160,436) இழப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“கடைகளுக்கு அருகே வீடுகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வசிப்போர் பொருள்களை வாங்கிய பின்னர் வண்டிகளைத் தங்களது வீடுவரை தள்ளிச் செல்கிறார்கள். பொருள்களை வீட்டில் சேர்த்ததும் அவற்றை வெளியே கொண்டு வந்து சாலை ஓரங்களிலும் இதரப் பகுதிகளிலும் கைவிட்டுவிடுகிறார்கள்.
“உலோகக் கழிவுகளைச் சேகரிப்போர் அந்த வண்டிகளை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்,” என்று ‘த ஸ்டார்’ ஊடகத்திடம் திரு அமீர் அலி விளக்கினார்.
அதனை அறிந்ததால் சாலை ஓரங்களிலும் குடியிருப்பு வட்டாரங்களிலும் தனது கடைகளின் தள்ளுவண்டிகளைத் தேடிப் பிடித்து மீட்டு வரும் பணியில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

