உக்ரேன் விவகாரம் குறித்த பேச்சில் முன்னேற்றம்: டிரம்ப்

உக்ரேன் விவகாரம் குறித்த பேச்சில் முன்னேற்றம்: டிரம்ப்

1 mins read
8c0ffa4c-89d8-4ac2-b270-08a0fafe2220
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (இடம்), அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: உக்ரேன் விவகாரம் குறித்த பேச்சில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட நான்காண்டாக ர‌‌ஷ்யா உக்ரேனில் தாக்குதல் நடத்துகிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதன் தொடர்பில் நடைபெற்ற அண்மைப் பேச்சு மிகவும் ஆக்ககரமாய் அமைந்ததாகத் திரு டிரம்ப் சொன்னார்.

பேச்சின் விவரங்களை அவர் வெளியிடவில்லை. இருப்பினும் பேச்சின் காரணமாக விரைவில் ஏதாவது நடக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக அமெரிக்க அதிபர் சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் இரண்டாம் முறையாகப் பதவியேற்றபோது சூளுரைத்திருந்தார். ஆனால் இன்னும் அது கைகூடவில்லை.

ர‌‌ஷ்யாவும் உக்ரேனும் அமைதி உடன்பாட்டை வரும் மார்ச் மாதத்திற்குள் எட்ட வேண்டும் என்பது இலக்கு. அதற்காக அமெரிக்க, உக்ரேனிய அதிகாரிகள் சமரசப் பேச்சில் ஈடுபட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) செய்தி வெளியிட்டது. இருப்பினும் மார்ச் மாதக் காலக்கெடுவில் மாற்றம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பிரதேச உரிமை குறித்த பிரச்சினையில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மே மாதம் அந்த விவகாரம் குறித்த உத்தேசப் பொது வாக்கெடுப்பை நடத்துவது பற்றியும் அமெரிக்க, உக்ரேனிய அதிகாரிகள் விவாதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

உக்ரேனும் ர‌‌ஷ்யாவும் 314 போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இணங்கியிருப்பதாகவும் திரு டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் வியாழக்கிழமை கூறினார்.

குறிப்புச் சொற்கள்