தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி வரலாறு படைத்துள்ளார். அவர் அறிவித்த திடீர்த் தேர்தல் பலனளித்திருக்கிறது.
வாக்காளர்கள் அவரின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையை வழங்கியுள்ளதாக அரசாங்கத் தொலைக்காட்சியான என்எச்கே தெரிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆக வலுவான தலைவர் என்ற பெருமையையும் திருவாட்டி தக்காய்ச்சி பெற்றுள்ளார்.
அந்தப் போருக்குப் பின்னர் ஜப்பானியத் தேர்தலில், தனிக் கட்சி ஒன்று கீழவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.
மிதவாத ஜனநாயகக் கட்சி, ஜப்பானியக் கீழவையில் மொத்தமுள்ள 465 இடங்களில் 310க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கூட்டணிக்கு 350க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்திருப்பதாக என்எச்கே தெரிவித்தது. இதற்கு முன்னர் அந்தக் கட்சிக்குக் கீழவையில் மிகக் குறுகிய பெரும்பான்மையே இருந்தது. அப்போது அதற்கு 233 இடங்கள் மட்டுமே இருந்தன.
சென்ற கோடைக்காலத்தில், மிதவாத ஜனநாயகக் கட்சி கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இக்கட்டான அந்தச் சூழலில் கடந்த ஆண்டு (2025) அக்டோபர் மாதம் நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருவாட்டி தக்காய்ச்சி.
ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பதவி விலகத் தயார் என்று தேர்தலுக்கு முன்பு அவர் கூறியிருந்தார்.
மிதவாத ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டை இழந்த ஏழே மாதத்தில், தேர்தலை நடத்தத் திருவாட்டி தக்காய்ச்சி எடுத்த முடிவு பலன் தந்துள்ளது.
தேர்தல் முடிவுகள், அவர் எண்ணியிருந்த திட்டங்களை முன்னெடுக்கவும் அவற்றுக்காகச் செலவிடவும் தேவையான அதிகாரத்தை வழங்கியுள்ளன. முதலீட்டாளர்களிடையே அவை நம்பிக்கை அளித்திருப்பதோடு அனைத்துலக அளவிலும் அவருக்கு உறுதியான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. அண்மையில் தைவானுக்கு ஆதரவாக அவர் கூறிய கருத்துகள் சீனாவைச் சினமூட்டியிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானியப் பிரதமரின் வெற்றியை எதிரொலிக்கும் வகையில் அந்நாட்டுப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. யென் நாணயமும் வலுவடைந்தது.

